மருத்துவ கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்!

மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சம்பந்தப்பட்ட புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. பணிகள் முடிவடைந்து அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி படித்துவரும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் கூடுதலாக புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்போம். மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளுமே மாணவர்கள் தமிழில் படிப்பதற்கு சட்ட சிக்கல்கள் உள்ளன. அதற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. இதுதொடர்பாக, தேசிய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். கடந்த ஜனவரியில் கூட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்கள் அனுமதி கொடுக்கும்பட்சத்தில் கூடுதலான மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

தமிழகத்தில் எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் முதல்வர் காலிப்பணியிடங்கள் இல்லை. ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும்தான் முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. விரைவில் அங்கும் முதல்வர் பணியிடம் நிரப்பப்படும். சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

எழும்பூரில் அரசு சார்பில், கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்ததாக மதுரையில் அமைக்கப்பட இருக்கிறது. சேலம், கோவையிலும் அடுத்தடுத்து கருத்தரிப்பு மையம் வர உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.