மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள படத்துக்கு ‘மண்டாடி’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
‘மாமன்’ படத்தினை முடித்துவிட்டு, மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிவிட்டது. இதனை ‘விடுதலை’ படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்கள். தற்போது இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள படத்துக்கு ‘மண்டாடி’ எனத் தலைப்பிட்டுள்ளனர். எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ள இப்படத்தில் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், சஞ்சனா நமிதாஸ், அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் சூரியுடன் நடிக்கவுள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
‘மண்டாடி’ படத்தின் மூலமாக தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழில் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்து சூரி தனது எக்ஸ் தளத்தில் “எல்லையற்ற கடல் தன்னுள் முடிவில்லா ரகசியங்களை சுமக்கும்பொழுது, நெருப்பினால் மட்டுமே அதன் கதைகளை சொல்ல முடிகிறது” என்று குறிப்பிட்டு ‘மண்டாடி’ அறிவிப்பினை பகிர்ந்துள்ளார்.