மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு!

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியின் முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியால் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், துரை வைகோ பொறுப்பேற்ற நாள் முதல் அவரது ஆதரவாளர்கள் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், கட்சி நிகழ்ச்சிகளில் அவரது பெயரை பேனர், போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடுகள் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வைகோ தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன்.

கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கத்தில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், இயக்கத் தந்தை வைகோவுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன்.

வைகோ அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும் “வாழ்நாள் போராளி” என்கிற விருது மட்டும்தான். மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார். அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதை கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர்.

நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர்’ என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு துரை வைகோ குறிப்பிட்டுள்ளாகூறியுள்ளார்.