தொலைக்காட்சி பார்த்துதான் துரை வைகோ முடிவை அறிகிறேன்: வைகோ!

மதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து துரை வைகோ விலகுவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பை, தொலைக்காட்சி வாயிலாகத்தான் அறிகிறேன் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்றும், நாளைய கூட்டமே என் கடைசிக் கூட்டம் என்றும் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிக்கை வாயிலாக வெளியிட்டிருந்தார்.

ஏற்கனவே பாமகவில் உள்கட்சிப் பூசல் எழுந்த நிலையில், தற்போது மதிமுகவிலும் துரை வைகோ கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, மதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து தொலைக்காட்சி ஊடகம் ஒன்று, மதிமுக பொதுச் செயலர் வைகோவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கேட்டதற்கு, அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்திருக்கும் முடிவு தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி பார்த்துதான் துரை வைகோ விலகலை அறிகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால், துரை வைகோவின் முடிவுக்குக் காரணம், தந்தை – மகன் இடையேயான பிரச்னை அல்ல என்றும், மல்லை சத்யா இடையே இருந்த பனிப்போர் வெடித்திருப்பதாகவும், மல்லை சத்யாவை நீக்க துரை வைகோ முடிவெடுத்துவிட்டார். அதற்கான நாடகம்தான் இந்த விலகல் முடிவு என்றும் நாளை நடைபெறும் மதிமுக நிர்வாகக் குழுவில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.