தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன், மற்றும் சமூக நீதி அரசியலைப் பாதுகாக்க, பாஜக உடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசியல், அதிமுக-பாஜக கூட்டணி, உச்சநீதிமன்ற விமர்சனங்கள், மற்றும் மதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து உள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் ஆர்டர்” என்று கூறிய கருத்தை முழுமையாக ஆதரிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் சக்தியாக வலிமை பெற பகீரத முயற்சி செய்கிறார்கள். திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி காலூன்றி நிற்க வேண்டும், பின்னர் அடுத்த திராவிட கட்சியை அழிக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம்” என்று உறுதியாகக் கூறினார்.
பாஜக மற்றும் சங் பரிவாரின் முதன்மை நோக்கம் தேர்தல் வெற்றி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நிலவும் பெரியார் மற்றும் சமூக நீதி அரசியலை அழிப்பது என்று திருமாவளவன் குற்றம்சாட்டினார். “திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளையும் பலவீனப்படுத்தி, முதலில் ஒரு கட்சியை வீழ்த்தி, பின்னர் மற்றொரு கட்சியை அழித்து, சமூக நீதி அரசியலை வலுவிழக்கச் செய்வதே பாஜகவின் உள்நோக்கம்,” என்று அவர் விளக்கினார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னரும், அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இது ஒரு வரலாற்றுப் பிழை என்றும் திருமாவளவன் கூறினார். “இந்த கூட்டணி அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவது மட்டுமல்ல, பாஜகவை வாக்கு வங்கி ரீதியாக வலிமைப்படுத்துவதற்கு துணைபோகிறது. தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன், மற்றும் சமூக நீதி அரசியலைப் பாதுகாக்க, அதிமுக இந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்திய குடியரசு துணைத் தலைவர் உச்சநீதிமன்றத்தை “சூப்பர் நாடாளுமன்றம்” என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவரைச் சந்தித்தது குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்தார். “இந்த சந்திப்பில் ஆச்சரியம் இல்லை. இருவரும் ஆர்எஸ்எஸ் பயிற்சி பாசறையில் வளர்ந்தவர்கள், ஒரே சிந்தனையில் இயங்குபவர்கள்,” என்று கூறினார்.
உச்சநீதிமன்ற விமர்சனத்தைப் பொறுத்தவரை, “அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பை பாஜக எவ்வித விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டது. ஆனால், அது உண்மையில் நீதியா என்று அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க தலையிடும்போது, அதை விமர்சிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயல்” என்று கூறி, குடியரசு துணைத் தலைவரின் கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிப்பதாக அறிவித்தார்.
ஆளுநர் ஆர்.என். ரவியின் “அடாவடி போக்கு” அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகவும், குடியரசுத் தலைவர் இதில் தலையிடத் தவறிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலையீடு வரவேற்கத்தக்கது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார். “அரசமைப்புச் சட்டமே மிக உயர்ந்தது. அதற்கு ஆபத்து ஏற்படும்போது அதைப் பாதுகாக்க வேண்டியது குடியரசுத் தலைவரின் கடமை,” என்று அவர் வலியுறுத்தினார்.
மதிமுகவில் துரை வைகோவின் பதவி விலகல் அறிவிப்பு குறித்த கேள்விக்கு, “இது மதிமுகவின் உட்கட்சி விவகாரம். அவர்கள் பேசி சுமூகமாகத் தீர்த்துக்கொள்வார்கள். இதனால் திமுக கூட்டணிக்கு எவ்வித பின்னடைவும் ஏற்படாது,” என்று திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார்.