என்.எல்.சியால் நீர்நிலைகளில் 115 மடங்கு பாதரச மாசுபாடு: வேல்முருகன்!

“மத்திய அரசின் வருவாய் சுரண்டலுக்காக கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்வியலையும் என்.எல்.சி. நிறுவனம் பலி கொடுப்பதை ஒருபோதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்றுக்கொள்ளாது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் அனல் மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதனையொட்டியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலை, நிலத்தடி நீர், மண் மாதிரிகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வுக்குட்படுத்தி, அதன் அறிக்கையைத் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்பித்துள்ளது. அவ்வறிக்கையின் மூலம், நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர் மற்றும் மண் மாதிரிகளில் அபாயகரமான அளவில் பாதரசம், நிக்கல், லெட், காட்மியம் உள்ளிட்ட கன உலோகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, மனித ஆரோக்கியத்திற்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடிய பாதரசமானது நீர்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 115 மடங்கு அதிகமாகவும், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 62 மடங்கு அதிகமாகவும் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு மேற்கொண்ட 17 நீர்நிலைகளில், 15 இடங்களில் பாதரசம் பாதுகாப்பான அளவுகளை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பான அளவை விட 115 மடங்கு பாதரசம் அதிகமாக இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, குடிக்கவோ நீர்ப்பாசனத்திற்கோ தகுதியில்லாத நீர்நிலை என்பதால், பாதரசத்தின் அபாயகர அளவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

வளையமாதேவி கூட்டுக்குடிநீர் திட்டம், பரவனாறு, வாலஜா ஏரி, அய்யன் ஏரி ஆகிய நீர்நிலைகள் உள்ள நிலையில், அவற்றை எப்படி குடிநீர் ஆதாரமாகக் கருதாமல் இருக்க முடியும்? ஏரி, குளங்கள் ஆகிய நீர்நிலைகள் இருக்கிறதென்றால், அவைகள் நிலத்தடி நீருக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும். நீர்நிலை உயிரினங்களுக்கு முக்கிய பயனுள்ளதாக இருக்கும். சோற்றில் பூசணிக்காயை மறைப்பது என்ற பழமொழிக்கு ஏற்ப, அடிப்படை உண்மைகளை மறைத்து விட்டு, வாலஜா ஏரி, அய்யன் ஏரி நீர்நிலைகளை குடிநீர் ஆதாரமாக கருதவில்லை என்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்நீர்நிலைகளில் எப்படி கன உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளன? மாசடைந்த நீர்நிலைகள் என்றால் மாசுபாட்டிற்கு யார் காரணம்? இந்நீர் நிலைகளில் நீர் அருந்தும் கால்நடைகளுக்கும், நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? என்கிற கேள்விகளுக்கெல்லாம் மாசு கட்டுப்பாடு வாரியம் வெளிப்படையாக பதிலளிக்காமல், பாதிப்புகள் குறித்து மட்டுமே ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டிருப்பது, என்.எல்.சி நிறுவனத்தின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் செயலாகும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சோதனைக்கு உட்படுத்திய 9 நிலத்தடி நீர் மாதிரிகளில் 6 இடங்களில் பாதரசம் இருப்பது தெரிய வந்துள்ளது. பாதரசத்தின் அனுமதிக்கப்பட்ட அளவானது 0.001 mg/l என்கிற நிலையில் 6 இடங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் பாதரசம் 0.0025 mg/l முதல் 0.0626 mg/l வரை கண்டறியப்பட்டுள்ளது. இது அனுமதிக்கப்பட்டதைவிட 2.5 முதல் 62 மடங்கு அதிகம் என்பதை, சுற்றுச்சூழலின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து போராடி வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தோழர்கள் தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அபாயகரமான அளவுகளில் பாதரசம் கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவக் குழுவை நியமித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயரிய சிகிச்சை மேற்கொள்வதோடு, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், மத்திய அரசின் பொருளாதார மேம்பாடு, வருவாய் பெருக்கம் ஆகியவற்றிற்காக, கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்வியலையும் பலி கொடுப்பதை ஒருபோதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்றுக்கொள்ளாது; பொறுத்துக்கொள்ளாது. ஆகவே, என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கத்தை கைவிட்டு, நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் அதிகரித்திருக்கும் பாதரச மாசுப்பாட்டை குறைக்கவும், பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.