நான் படிக்கிறபோது மும்பை பாதுகாப்பான நகரம் கிடையாது: மாளவிகா மோகனன்!

“நான் மும்பையில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மும்பை பாதுகாப்பானதா என்று கேட்டால், மும்பை பாதுகாப்பான நகரம் கிடையாது” என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தமிழில் இவரது நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த சில காட்சிகளை நீக்கி விட்டதாக பேட்டி ஒன்றில் வருத்தம் தெரிவித்தார்.

ஹிந்தியில் நடிக்கத் தொடங்கியுள்ள மாளவிகா மோகனன், அங்கு கிளாமரில் பட்டையைக் கிளப்பியுள்ளார். தனது முதல் படமான யுத்ரா படத்தில் செம கிளாமராக நடித்தார். படத்தில் கிளாமராக நடித்தது மட்டும் இல்லாமல், படத்தின் புரோமோசன்களுக்கு அதற்கு மேல் கிளாமராக கலந்து கொண்டு பாலிவுட் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். மலையாளத்தில் மோகன்லால் உடன் ஹிருதயபூர்வம் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இப்படியான மாளவிகா மோகனனுக்கு மும்பையில் ரயிலில் பயணிக்கும் போது மிகவும் மோசமான அனுபவம் ஒன்று ஏற்பட்டதை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மாளவிகா மோகனன் கூறியதாவது:-

மும்பை இப்போது பாதுகாப்பான நகரமா எனக் கேட்டால், அதற்கு இப்போதைக்கு பாதுகாப்பான நகரம் என்றுதான் கூறுவேன். அதற்கு காரணம் என்னிடம் தனியாக கார் உள்ளது. கார் ஓட்டுவதற்கு நான் தனியாக ஒரு டிரைவரை வேலைக்கு வைத்துள்ளேன். ஆனால் நான் மும்பையில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மும்பை பாதுகாப்பானதா என்று கேட்டால், மும்பை பாதுகாப்பான நகரம் கிடையாது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் கிடையாது எனக் கூறுவேன்.

ஒருமுறை நானும் என் தோழியும் இரவு சுமார் 9.30 மணி இருக்கும், எலக்ட்ரிக் டிரைனில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தோம். நாங்கள் இருவரும் முதல் வகுப்பு பெட்டியில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணித்துக்கொண்டு இருந்தோம். ஒரு ஸ்டேஷனில் ரயில் நிற்கும் போது, எங்களுக்கு அருகில் வந்த ஒரு மர்ம நபர், ஜன்னலில் அவரது முகத்தை வைத்து, முத்தம் கேட்டார். எங்களுக்கு பயம் ஆகிவிட்டது. பயத்தில் நாங்கள் அப்படியே உறைந்து போய்விட்டோம். அப்போது பெட்டியில் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இது போன்ற கதைகள் இருக்கும். பெண்களுக்கு எந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்காது. இவ்வாறு மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.