தற்போது நாட்டில் நடக்கும் மதமோதல்களுக்கு உச்சநீதிமன்றம் தான் காரணம்: நிஷிகாந்த் துபே!

நாட்டில் உச்சநீதிமன்றம் சட்டங்களை கொண்டு வரும் என்றால் நாடாளுமன்றத்தை இழுத்து மூட வேண்டும் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதற்கு காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி உள்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழக சட்டசபை மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்காததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கப்படுவதாக அறிவித்தது. அதுமட்டுமின்றி சட்டசபை மசோதாக்கள் மீது ஆளுநர்களும், நாடாளுமன்ற மசோதாக்கள் மீது ஜனாதிபதியும் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயம் செய்தது. இதனை மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கு எதிராக முறையீடு செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு நடுவே சமீபத்தில் நாடாளுமன்ற இருசபைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுக்கப்பட்டது. இருசபைகளிலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து வக்பு சட்டம் அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனை துணை ஜனாதிபதியும், நாடாளுமன்ற ராஜ்யசபா தலைவருமான ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இப்போது பாஜக எம்பி நிஷிகாந்த் துபே உச்சநீதிமன்றத்தையும், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷி காந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛உச்சநீதிமன்றம் சட்டங்களை கொண்டு வரும் என்றால் நாடாளுமன்றத்தை இழுத்து மூட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

உச்சநீதிமன்றத்தை தற்போது விமர்சனம் செய்துள்ள நிஷிகாந்த் துபே ஜார்கண்ட் மாநிலம் கோட்டா நாடாளுமன்ற தொகுதியில் 2009, 2014, 2019, 2024 என தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றி பெற்றவர். மேலும் அவர் அளித்த பேட்டியில், ‛‛உச்சநீதிமன்றம் தனது அதிகார வரம்பை தாண்டி செயல்பட்டு வருகிறது. அனைத்து விஷயங்களுக்கும் ஒருவர் உச்சநீதிமன்றம் செல்ல முடியும் என்றால் நாடாளுமன்றம் சட்டசபையை இழுத்து மூட வேண்டும். தற்போது நாட்டில் நடக்கும் மதமோதல்களுக்கு உச்சநீதிமன்றம் தான் காரணம். சட்டத்தின்படி ஒரு அமைப்பின் நியமனத்துக்கு உச்சநீதிமன்றம் எப்படி வழிக்காட்ட முடியும்? ஜனாதிபதி தான் இந்தியாவின் தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார். நாட்டுக்கான சட்டத்தை நாடாளுமன்றம் தான் உருவாக்குகிறது. இப்படி இருக்கும்போது நீதிமன்றத்தால் எப்படி நாடாளுமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்?” எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இது சர்ச்சையாகி உள்ளது.

நிஷிகாந்த் துபேவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சிகள் பலவும் அவரை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளன. திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ‛‛நிஷிகாந்த் துபே எம்பிக்கு எதுவுமே தெரியாது. உச்சநீதிமன்றம் என்பது நாட்டின் சட்டங்களைப் பாதுகாக்கின்ற ஒரு அமைப்பு. மத்தியில் ஆளும் அரசாங்கமானது தாங்கள் நினைத்தபடி அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சிக்கிறது. அனைத்துவிதமான சட்டங்களுக்கும் எதிராகவே பாஜக செயல்பட்டு வருகிறது. ஆகையால்தான் சட்டங்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது என்றார்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹூசைன் தல்வால் கூறுகையில், நாட்டின் நீதித்துறைக்கு எதிரானது நிஷிகாந்த் துபேயின் விமர்சனம். நமது நாட்டின் துணை ஜனாதிபதியே நீதித்துறையை விமர்ச்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு நீதித்துறையை விமர்சிக்கக் கூடாது. இவை எல்லாம் பாஜகவினர் அரசியல் சாசனத்தை மதிக்காமல் மீறி நடப்பதையே வெளிப்படுத்துகிறது என்றார்.

இதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித், ‛‛ஒரு எம்பி உச்ச நீதிமன்றத்தையோ அல்லது வேறு எந்த நீதிமன்றத்தையோ கேள்வி கேட்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். நமது சட்ட அமைப்பை எடுத்து கொண்டால் இறுதி வார்த்தை என்பது அரசின் முடிவாக இருக்காது. அது உச்ச நீதிமன்றத்தின் வார்த்தை. இதை புரிந்து கொள்ளவில்லை என்றால் அது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்” என்றார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‛‛அவர்கள் (பாஜகவினர்) உச்சநீதிமன்றத்தை வலுவிழக்க செய்கின்றனர். அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள். ஒரு சட்டம் இயற்றப்படும்போது, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிராகச் செல்லக்கூடாது என்றும், சட்டம் அரசியலமைப்பிற்கு எதிராக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறுகிறது” என்று விளாசி உள்ளார்.

ஆம்ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார், ‛‛அவர் (நிஷிகாந்த் துபே) மிகவும் மோசமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். நாளையே உச்ச நீதிமன்றம் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கைத் தொடங்கி அவரை சிறைக்கு அனுப்பும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பாஜக எம்பி தினேஷ் ஷர்மா ஆதரவு அளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛இந்திய அரசியலமைப்பின்படி மக்களவை, மாநிலங்களவையை யாரும் வழிநடத்த முடியாது. சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி அனுமதி அளித்தால் அவரை யாரும் சவால் செய்ய முடியாது. ஏனென்றால் நாட்டில் ஜனாதிபதியே உச்சபட்சமானவர்” என கூறியுள்ளார்.