தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் என்பது வதந்தி: மு.க.ஸ்டாலின்!

தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் கவர்னர் என்பவர் போஸ்ட்மேன் போன்றவர்தான். தற்போதைய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பும் இதைத்தான் கூறியிருக்கிறது. தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார். தன்னை ஒரு தீவிர பா.ஜ.க.காரராக கவர்னர் ஆர்.என்.ரவி காட்டிக் கொள்கிறார். பதவிக்காலம் முடிந்த பிறகும் கவர்னர் தமிழ்நாட்டில் உள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் என்பது வதந்தி. தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கிறேன். அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன்; தற்போது அது உண்மையாகியுள்ளது. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம்; 2026 தேர்தலிலும் நிச்சயம் தோற்கடிப்போம்.

ஆட்சியை பிடிக்க விரும்பிய அ.தி.மு.க. தலைவர்கள், பா.ஜ.க.வின் விருப்பப்படி தமிழகத்தின் மீது நீட் தேர்வை திணித்தனர். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.