ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர் நடித்துள்ள ‘கலியுகம்’படம் மே 9ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவான படம் ‘கலியுகம்’. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியினை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். மே 9ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் திரில்லராக இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர் வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது. முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான சம்பவங்களுடன், ஒரு அழுத்தமான திரில்லர் பயணமாக ‘கலியுகம்’ அமைந்துள்ளது.