தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளிலுமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளிலும் சுமார் 12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கானோர் பணி ஓய்வு பெறுகின்றனர். அதனால் காலிப் பணியிடங்களும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், அத்தகைய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் அரசுத்துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
குறிப்பாக, தமிழ்நாடு மின்வாரியத்தில் மட்டும் சுமார் 65 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாகத் தெரியவருகிறது. அத்துடன், தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்உற்பத்தி, மின்பகிர்மானம் மற்றும் தட்டச்சுப் பணிகளில் ஆயிரக்கணக்கானோர் பத்தாண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
மழை,வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் காலங்களில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
மேலும், அவர்களுக்கான பணி்நிரந்தரம் தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை 06-09-2022 அன்று வழங்கியுள்ள தீர்ப்பின்படி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டுகிறோம். மேலும் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி ‘கேங்மேன்’ பணியாளர்களாகக் கண்டறியப்பட்டுள்ள 5443 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன், அரசுத்துறைகளில் காலி பணியிடங்கள் மற்றும் பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டுமெனவும்; அதனடிப்படையில் அரசின் அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.