தமிழகத்தில் முற்போக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக அண்மையில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு முதன் முறையாக தமிழகம் வந்த அவர் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது, மதவாத சக்திகளுக்கு கடும் பதிலடி கொடுக்க ஜனநாயக மதச்சார்பற்ற, முற்போக்கு அரசியல் சக்திகளின் தலைமையில் தமிழக மக்களை ஒருங்கிணைத்துள்ளது குறித்தும், அதை வலுவாக கட்டியெழுப்புவதில் திமுகவின் பங்களிப்பு குறித்து பேசினோம்.
ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலின்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் உரிமை, ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு சீர்குலைத்து வருகிறது.
வக்பு திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது சிறுபான்மையினர் உரிமைகள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்பதற்கு சமீபத்திய உதாரணம். நாடாளுமன்றத்தில் இந்த வக்பு மசோதாவுக்கு எதிராக அதிமுக வாக்களித்தது. அதேநேரத்தில், அவர்கள் பாஜகவுடன் சேர்ந்தது சிறுபான்மையினருக்கு எதிரானதாகும். வக்ப் சட்டத்தின் பல விதிகள் சிறுபான்மையினருக்கு அரசியல் சாசன உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அதேபோல், ஆளுநர் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பை சட்டப் போராட்டத்தின் மூலம் பெற்று தந்த தமிழக முதல்வருக்கு வாழ்த்துகள்.
ஒரு வருடத்துக்குள் சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தில் முற்போக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்றும் முடிவெடுத்துள்ளோம். மேலும், இந்த அணி ஒட்டுமொத்த நாட்டுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இச்சந்திப்பின் போது, கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.