பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்கிறார்: கவர்னர் மாளிகை!

பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்கிறார். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு மற்றொரு ரிட் மனுவையும் சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யு.ஜி.சி. தலைவரையும் சேர்க்க கவர்னர் வலியுறுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதன்படி இனி துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க முடியும்.

இதற்கிடையில், கவர்னர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை சுட்டிக்காட்டி துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த கவர்னருக்கு அதிகாரம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.

இந்த நிலையில், கவர்னர் மாளிகை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா, துணைவேந்தர்கள் மாநாடு நடத்த கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 3 ஆண்டுகளாக உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருவதாகவும், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

அதோடு ஊட்டியில் வரும் 25, 26-ந்தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது என்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னரே தொடர்கிறார் என்றும் கவர்னர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.