தமிழகத்தில் போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா ஆளுநர் ரவி?: கி.வீரமணி!

தமிழகப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்கள் மாநாட்டை ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளது சட்ட மீறல்; உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

8.4.2025 அன்று உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநர் நடவடிக்கை பற்றி கண்டனம் தெரிவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது. அத்தீர்ப்பின்படி, இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியும் கூட, பல மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநரின் செயல், அரசமைப்புச் சட்டத்தின் கூறு (Article) 200 இன்படி சட்ட விரோதம் என்று கூறி, தமிழ்நாடு அரசுக்கு “முழு நீதி” (Complete justice) வழங்க வேண்டும் என்பதில் இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 142இன்படி எந்த தேதியில் அது நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதோ, அன்று முதல் (18.11.2023) இந்த மசோதாக்கள் அமலுக்கு வருவதாகக் கொள்ளப்படும் என்று ஆணையிட்டிருக்கிறார்கள்.
அதன்படி, தமிழ்நாடு ஆளுநர் ரவிக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை அழைக்கவோ, கலந்தாலோசிக்கவோ உத்தரவுகள் பிறப்பிக்கவோ எந்த அதிகாரமும் இல்லை என்பதுதான் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டுமுறை நிறைவேற்றப்பட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி தற்போது அமலுக்கு வந்துள்ள சட்டங்களின்படியும், அரசமைப்புச் சட்டப்படியும் உள்ள தற்போதைய நிலை ஆகும்.

இந்நிலையில் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய நாள்களில் ஊட்டியில் உள்ள ஆளுநரின் கோடை மாளிகைக்குத் துணைவேந்தர்கள் கூட்டம் என்ற பெயரில், அனைத்துத் துணைவேந்தர்களையும் பங்கேற்குமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இது உண்மையாக இருந்தால், ஆளுநரின் இந்தச் செயல்

1. அப்பட்டமான அரசியல் சட்ட மீறல்
2. ஆளுநர் நடத்தும் ‘போட்டி அரசாங்கம்’ (Parallel Government)
3. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை
4. ‘நீதிமன்ற அவமதிப்பு’
5. குடியரசுத் துணைத் தலைவரும் இதில் வந்து கலந்து கொள்வது எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போன்ற அடாவடி நடவடிக்கை; அரசியல் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையும் கூட!

எனவே, ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் ஆளுநர் அழைத்துள்ள கூட்டத்தில் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் கலந்துகொள்ளக் கூடாது. ஆளுநர் அழைப்பைப் புறக்கணிக்க வேண்டியது துணைவேந்தர்களின் சட்டப்படியான கடமையாகும். இந்த ‘விபரீத விளையாட்டு’களின் மூலம் ஆளுநரோ, குடியரசுத் துணைத் தலைவரோ ஓர் அரசியல் நெருக்கடியை – உச்சநீதிமன்றத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் உருவாக்கிடும் அரசியல் அடாவடித்தனமேயாகும். தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசியல் விபரீத விளையாட்டைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாடு மக்களின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்காக, குடியரசுத் துணைத் தலைவர் மீது மாநிலங்களவையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.