தமிழ்நாட்டில் மட்டும் போலீசாருக்கு சங்கம் இல்லாதது ஏன்?: உயர்நீதிமன்றம்!

“கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசாருக்கு சங்கம் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அவர்களுக்கு சங்கம் இல்லாதது ஏன்?” உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதை எதிர்த்து, மதுரை ஆஸ்டின்பட்டி காவலர் செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரினார். காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை வார விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரிய வழக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு லட்சத்து 20 ஆயிரம் காவலர்கள் இருக்கும் நிலையில், ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்திருப்பது பாராட்டத்தக்கது என்று நீதிபதி கூறினார். மற்ற காவலர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? இது மேலதிகாரிகளின் மீதான அச்சமா? இது வியப்பாக உள்ளது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமை அனைவருக்கும் தானே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு சங்கங்கள் இருக்கும் நிலையில் காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை? இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் இருக்கும் போது தமிழ்நாட்டில் ஏன் இல்லை எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

2021இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் அந்த அரசாணையும் விளம்பர நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டது எனக் கூற இயலுமா? காவலர் விடுமுறை அரசாணையை உயரதிகாரிகள் நடைமுறைப்படுத்தாதது ஏன்? இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? முதலமைச்சரின் உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லையா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், காவலர் வார விடுமுறை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.