பட்டியல் மாற்றத்தில் அரசியல் மோசடியால் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது: புதிய தமிழகம்!

தேவேந்திர குல வேளாளர் பெயரை பயன்படுத்தி, தனக்கு தானே பாஜக போலி விளம்பரம் செய்கிறது எனவும், வெட்டி விளம்பரத்தின் மூலம் பட்டியல் மாற்றத்தில் அரசியல் மோசடியால் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என புதிய தமிழகம் கட்சி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பட்டியல் பிரிவில் இடம் பெற்றிருந்த தேவேந்திரகுல வேளாளர் மக்களின் 7 உட்பிரிவுகளை ஒன்றாக்கி, SC பட்டியல் பிரிவிலிருந்து விடுவித்து மிக மிக பின்தங்கியோர் என்ற புதுப் பட்டியலை உருவாக்கியுள்ளோம். அம்மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை வழங்கிடவும் ‘புதிய தமிழகம் கட்சி’ துவங்கிய காலத்திலிருந்து கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் 2017ல் சென்னையில் மாநாடு, டெல்லியில் பேரணி, 2018-ல் விருதுநகர், திருச்சியில் மாநாடு, 2019ல் 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம், 2021ல் மதுரையில் தடையை மீறி மாபெரும் பேரணி என நமது தொடர் போராட்டங்களின் வாயிலாக பெயர் மாற்றத்தை மட்டும் 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அறிவித்து விட்டு, நமது பிரதானக் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை அப்படியே விட்டுவிட்டு, “கேட்டதைக் கொடுத்து விட்டோம்” என பாஜகவினர் ஊர் ஊராக விளம்பரப் பேனர்களை வைத்து சுய தம்பட்டம் அடித்துக் கொண்டதுடன் நம்முடைய வாக்குகளையும் அள்ளிக் கொண்டார்கள்.

“பட்டியல் மாற்றத்திற்கான உத்தரவாதத்தை அளித்தால் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் BJP – AIDMK கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் ஆதரித்து பிரச்சாரம் செய்யத் தயார்” என தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் அறிவித்தார். எனினும் இரண்டு கட்சிகளும் ஒரு சேர ஏமாற்றியதால் அக்கூட்டணியைப் புறக்கணித்து, தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை முன்னிறுத்தி ‘புதிய தமிழகம் கட்சி’ தனித்து போட்டியிட்டது.! பெயர் மாற்றத்திற்காக நாடாளுமன்றம் வரை கொண்டு சென்று திருத்தம் செய்த மத்திய அரசு கையோடு பட்டியல் மாற்றத்தையும் செய்து கொடுத்திருந்தால் அப்பிரச்சனை அன்றோடு முடிந்து போயிருக்கும். லட்சோபலட்சம் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் உயிர் மூச்சான பட்டியல் மாற்றக் கோரிக்கையும் நிறைவு பெற்றிருக்கும். அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகவும், சாதனையாகவும் அமைந்திருக்கும்.! ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை; செய்யவும் அவர்களுக்கு மனமில்லை. அரை நூறாண்டுக் காலம் உரக்கக் கத்தியும் அவர்கள் செய்ய மறுத்த பின்னரும் மீண்டும் அவர்களிடத்திலே பேசுவதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.!

எனவே, நாம் அதுபோன்ற கோரிக்கையை எவரிடமும் இனி வைக்கப் போவதில்லை.! நாமே அதிகாரத்தில் அமரக்கூடிய காலம் விரைவில் வரும் அல்லது உருவாக்குவோம் எனும் தீர்க்கமான உள உறுதியோடும், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவோம் என்ற முழக்கத்தோடும், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒட்டுமொத்தத் தேவேந்திரகுல வேளாளர் மக்களையும் ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைத்து வருகிறோம்.! யார் யாரையோ முதலமைச்சராக்க அல்லது அமைச்சராக்க அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாக்க நாங்கள் இனியும் காலமெல்லாம் வாக்களிக்க மாட்டோம்..! ‘ஆட்சியிலும், அதிகாரத்திலும் பகிர்வு’ என்ற குறிக்கோள் நிறைவேறவே எங்கள் கூட்டணி அமையும் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தெரிவித்த கருத்து தமிழ்நாடெங்கும் தேவேந்திரகுல மக்கள் மத்தியில் மட்டுமல்ல, அனைத்து மக்கள் மத்தியிலும் பற்றி எரிகிறது..! இதுவே, 2026-ல் அரசியல் சாசனம் ஆகும்.!

தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் மீண்டும் ஒற்றுமையாவதை, ஓரணியில் ஒன்றுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாத சதிகாரக் கூட்டம் மீண்டும் தேர்தல் நேரத்தில் நம் மக்களை ஏமாற்றக் களம் இறங்கி இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக, திடீரென்று பட்டியல் மாற்றத்திற்காக ஒருவர் சட்டமன்றத்தில் முழங்கி விட்டாராம்.! மக்கள் மன்றங்களில் போராடிப் போராடி ரத்தம் சிந்திவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து ‘அனைத்து தேவேந்திரகுல சங்கங்கள்’ என்ற‌ பெயரில் ஒரு மாலைப் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை இன்று கண்டோம்.! இது கண்டனத்திற்குரியது..! நாடாளுமன்றம் வரை சென்றும் பட்டியல் மாற்றத்தை அறிவிக்காதவர்கள் தற்போது சட்டமன்றத்தில் பேசியா தீர்க்கப் போகிறார்கள்.? இதே திட்டமிட்டு ஒருவரால் சுய லாபத்திற்காகக் கொடுக்கப்பட்ட ஏமாற்று விளம்பரம். போலி சரக்குகளை கொண்டு வந்து மோசடி செய்வதும், போலிச் சங்கங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றுவதும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தண்டனைக்குரியதாகும். இனியும் சம்பந்தப்பட்ட நபர் இதுபோன்ற சுய விளம்பரத்தில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற மனிதர்களை வைத்து வெட்டி விளம்பரத்தின் மூலம் பட்டியல் மாற்றத்தில் அரசியல் மோசடியால் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது; ஏமாற்றவும் விடமாட்டோம் என்று எச்சரிக்கிறோம்..! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.