என்னுடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்காது: சுந்தர் சி!

என்னுடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெருவதை நான் விரும்புவது இல்லை என்று சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி – வடிவேலு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. இதற்கு சத்யா. சி இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடிக்கின்றார். ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுந்தர் சி கூறியதாவது:-

என்னுடைய படங்களுக்கு அதிகமாக வரும் பார்வையாளர்கள் யாரென்று பார்த்தால் குழந்தைகளும், ஃபேமிலி ஆடியன்ஸும்தான். எனவே அவர்கள் ரசிக்கும்படிதான் நான் காட்சிகள் வைப்பேன். மிகவும் ஆபாசமான காட்சிகள், என் படங்களில் இருக்காது. டபுள் மீனிங் வசனங்களை என் படங்களில் நான் வைப்பதில்லை.

ஒருவேளை அப்படி டபுள் மீனிங் இருந்தால் அது பார்ப்பவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கலாம். நான் எந்த எண்ணத்தில் வைத்திருக்க மாட்டேன். காரணம், எழுதும்போதே டபுள் மீனிங் வசனங்களை நான் தவிர்த்து விடுவேன். அதே போல ஆபாச வசனங்களும் இருக்காது.

என் படங்களில் கிளாமர் இருக்கும். நாம் வைக்கும் ஆங்கிள் தான் முக்கியம். புடவை கட்டிக் கொண்டு வந்தால் கூட டாப் ஆங்கிள் வைத்தால் தப்பாகி விடும். ஹீரோயின் கவுன் போட்டுக் கொண்டு வரும்போது லோ ஆங்கிள் வைத்தால் அதுதான் ஆபாசம். ஆனால் அதை என் படங்களில் எப்போதுமே செய்வதில்லை. முடிந்த அளவுக்கு நான் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் அளவுக்கு அழகாக ஷூட் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன். என் படங்களில் பாலியல் வன்கொடுமை காட்சிகளோ, ஸ்பெஷல் ஐட்டம் பாடல்களோ நான் வைத்ததில்லை. என் குடும்பத்தோடு உட்கார்ந்து நான் ஜாலியாக படம் பார்க்க வேண்டும். இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.