தெலுங்கு திரை உலகின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் மகேஷ் பாபுக்கு சம்மன் அனுப்பி உள்ளது அமலாக்கத்துறை. ரியல் எஸ்டேட் நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கில் வரும் 28-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய் சூர்யா மற்றும் சுரானா என இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புதிய புராஜக்டுகளை ஆமோதித்து எண்டார்ஸ்மெண்ட் செய்திருந்தார் நடிகர் மகேஷ் பாபு. இதற்காக சுமார் 5.9 கோடி ரூபாயை அவர் பெற்றுள்ளதாக தகவல். இதில் ரூ.3.4 கோடி காசோலையாகவும், ரூ.2.5 கோடி ரொக்கமாகவும் பெற்றுள்ளதாக தகவல். சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்த பணத்தை மோசடி மூலம் பெற்றிருக்கலாம் என அமலாக்கத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனால் மகேஷ் பாபுவுக்கு தற்போது சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் சுரானா நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான நரேந்திர சுரானா மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான சதிஷ் சந்திர குப்தா மற்றும் பலருக்கு எதிராக பதிவான புகார்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த மோசடி வழக்கை விசாரித்து வருகிறது.
ஒரே மனையை பலருக்கு விற்பனை செய்தது, போலியான பதிவு உத்தரவாதத்தை அளித்தது, ஒழுங்குமுறை சாராத மனை பிரிவுகளுக்கு மனை வாங்க முன்வந்தவர்களிடம் இருந்து முன்பணம் பெற்றது என இந்த நிறுவனங்கள் கோடி கணக்கிலான ரூபாயை மோசடி செய்ததாக புகார் உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மகேஷ் பாபுவின் செயல் மேலும் பலரை மோசடி வலையில் விழ செய்தது. இந்த மோசடியை செயல்படுத்தியதில் மகேஷ் பாபுவுக்கு தொடர்பு இல்லை என்றாலும், அதற்காக இந்த நிறுவனங்களிடம் இருந்து அவர் பெற்ற பணம் மோசடி மூலம் பெறப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.