பகல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும்: அண்ணாமலை!

காஷ்மீரின் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு நிச்சயம் தக்கப் பதிலடி கொடுக்கும் என்று பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பகல்காம் என்ற இடத்தில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்பாவி மக்களைக் குறிவைத்து அவர்கள் தாறுமாறாகச் சுட்டுத்தள்ளினர். இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் நடந்த இந்தப் பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்குவதாக அமைந்துள்ளது. காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் இப்போது சென்றுள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடற்படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். அனைவரும் இந்தக் காலகட்டத்தில் காஷ்மீரைச் சுற்றிப் பார்த்தால் நன்றாக இருக்கும் என காஷ்மீர் சென்றவர்கள். திட்டமிட்டு மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளனர். ஒரு மனிதன் இப்படிச் செய்வானா என யோசிக்கும் அளவுக்குக் கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. எல்லா மதமும் ஒரே மதம் என நினைக்கும் நபர்தான் நான். ஆனால், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அதுபோல நினைக்கவில்லை. எந்த மதம் எனக் கேட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நமது பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி சென்றிருந்தார். தாக்குதலால் ஒரே நாளில் நாடு திரும்பினார். அமெரிக்கத் துணை அதிபர் ஜே டி வான்ஸும் இந்தியா வந்திருந்தார். சரியாக இந்த நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் ஐஎஸ்ஐ தான் இருக்கும். இந்தத் தாக்குதலைக் கண்டிக்கிறோம். நமது மத்திய அரசு இதற்குத் தரும் பதிலடி முக்கியமாக இருக்கும். இந்த நேரத்தில் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பலரும் ஆக்ரோஷமாகப் பதிவிடுகிறார்கள். அதெல்லாம் தேவை இல்லாதது. அரசும் அரசு இயந்திரமும் தகுந்த நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்வார்கள். ஏற்கனவே தீவிரவாத தடுப்பு நடவடிக்கையைத் தொடங்கிவிட்டதாக காஷ்மீர் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசு என்ன பதிலடி எப்படி எந்த நேரத்தில் கொடுக்க வேண்டுமோ அப்படி நிச்சயம் கொடுப்பார்கள். அதனால் நாம் செய்ய வேண்டிய வேலையை நிறுத்தக்கூடாது.

காஷ்மீர் செல்லும் திட்டமிருந்தால் தாராளமாகப் போங்க. அமர்நாத் யாத்திரை, சுற்றுலா என எதற்கு புக் செய்திருந்தாலும் தாராளமாகப் போகலாம். கோழைத்தனமான இந்தத் தாக்குதலுக்குப் பயந்து நாம் நமது திட்டத்தை மாற்றக்கூடாது. நாம் திட்டத்தைத் தொடர வேண்டும்.. அதுவே தீவிரவாதிகளுக்குப் பயத்தைக் கொடுக்கும். நிச்சயம் அரசு இதற்கான பதிலடியைத் தரும். அரசியல் பேசுவோர் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். பிரதமர் மோடி 3வது முறையாகப் பதவியேற்றபோது, அன்றைய தினமே காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்பதே அவர்கள் திட்டம். ஆனால், அதைத் தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைக் கடந்த காலத்தில் எடுத்துள்ளது. இனியும் எடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.