என்எல்சி தொமுச-வை தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற இருக்கின்ற ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-இல் வாக்களித்துத் தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நிறுவனத்தில் பணியாற்றும் அன்பு அருமைத் தோழர்களே! இனிய நண்பர்களே! அனைவருக்கும் உங்களில் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அன்பு வேண்டுகோள்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்எல்சி பொதுத்துறை நிறுவனத்தில் நடைபெறுகின்ற சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்புத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

மத்திய அரசுகள் என்எல்சி பங்குகளை விற்றுத் தனியார்மயத்தைப் புகுத்த முயற்சித்த நேரத்தில், திமுக எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக அது தடுக்கப்பட்டு இன்றளவும் இந்தியாவிலேயே அதிக ஊதியம் பெறக்கூடிய தொழிலாளர்கள் பணியாற்றக்கூடிய பொதுத்துறை நிறுவனமாக என்எல்சி நிறுவனம் விளங்குகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கடந்த தேர்தல்களில் பெரும்பான்மையான தொழிலாளர்களின் வாக்குகளோடு நமது தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் முதன்மைச் சங்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல்வேறு நலப் பணிகளைச் சிறப்பாக ஆற்றி உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

குறிப்பாக கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களின் 124 வாரிசுகளுக்கு வேலை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றிய 3,154 தொழிலாளர்களை சொசைட்டி தொழிலாளர்களாகவும், சொசைட்டி தொழிலாளர்களாக இருந்த 2,173 தோழர்களை நிரந்தரத் தொழிலாளர்களாகவும், டிப்ளமோ மைனிங் முடித்த 180 இளம் தோழர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்ய வைத்திருக்கிறோம்.

உலகம் முழுவதும் நிரந்தரப் பணியாளர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றுகிற தருணத்தில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்கிய சாதனைகளைப் படைத்ததுதான் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்.

தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு மற்றும் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை, சிறந்த பதவி உயர்வு வாய்ப்புகள், பாதுகாப்பான பணிச் சூழல் இவற்றை உறுதி செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்முடைய தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்திற்கு உண்டு.

எனவே 2027-இல் நடைபெற இருக்கின்ற ஊதியமாற்று ஒப்பந்தத்தில் மேற்கண்ட முக்கியக் கோரிக்கைகளை வென்றெடுக்கத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் இந்த ரகசிய வாக்கெடுப்பில் தனிப்பெரும் சங்கமாக வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” – என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, கடந்த காலத்தில் திமுக, தொழிலாளர் முன்னேற்றச் சங்கமும் ஆற்றி இருக்கக்கூடிய எண்ணில் அடங்கா நலப் பணிகளைக் கருத்தில் கொண்டு 25.4.2025 நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற இருக்கின்ற ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-இல் வாக்களித்துத் தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.