காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
காஷ்மீரில் நடந்துள்ள தாக்குதல் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்களை தடுக்க ஒட்டுமொத்த இந்தியர்களும் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இத்தகைய பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்க வேண்டும். அமைதி நிலவுகிறது பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று உள்துறை மந்திரிஅமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார். 370 அரசமைப்பு சட்டத்தை மாற்றி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றி விட்டதாக மகிழ்ந்தார். அங்கே பயங்கரவாதம் தொடரும் என்பதைதான் இந்த கொடூர நிகழ்வு உணர்த்துகிறது.
பிரதமர் மோடி காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்துக்கு செல்லாமல், பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ள சூழலில், அந்த பகுதிக்கு நேரில் சென்றிருந்தால் மக்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கும். ஆனால், காஷ்மீர் தாக்குதலை பீகார் சட்டசபை தேர்தலுக்கான பரப்புரைக்கு பயன்படுத்துவது கசப்பளிக்கிறது.
காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும்; அரசியலுக்காக இதை வலியுறுத்தவில்லை; நாட்டின் பாதுகாப்பு கருதி சொன்னேன். சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி பழங்குடியின மக்கள் கொல்லப்படுகின்றனர். மாவோயிஸ்ட் படை தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது. இந்தியாவில் அமைதியின்மை நிலவுவதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
பாஜக வளர தொடங்கிய பின்தான் பாஜகவின் வகுப்புவாத அரசியல் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பகைவர்களாக மாற்ற முயற்சிக்கிறது. இந்து முஸ்லீம் இடையிலான மத அடிப்படையிலான முரண்பாடு மக்களுக்கிடையே நிலவும் முரண்பாடு என்று நினைப்பது ஏற்புடையதல்ல. மீண்டும் இந்து முஸ்லிம் பிரச்சினையாக பேசுவது தீர்வுக்கு பயன்படாது. இவ்வாறு அவர் கூறினார்.