அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப்பொறியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமலும், காலியாக உள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை நிரப்பாமலும் உள்ள திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. போதிய தூய்மைப்பொறியாளர்கள் இல்லாத காரணத்தால் அரசுப்பள்ளி மாணவ-மாணவியர் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை அதிகரித்து வருவது மிகுந்த வேதனைக்குரியது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 24,310 தொடக்கப்பள்ளிகள், 7,024 நடுநிலைப்பள்ளிகள், 3,135 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 3,110 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் வகுப்பறைகளைத் தூய்மைப்படுத்தவும், கழிப்பறைகளைச் சுத்தம் செய்யவும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் தூய்மைப்பொறியாளர்கள் நியமிக்கப் படுகின்றனர். அவர்களுக்கான மாத சம்பளம், தூய்மைப் பணிக்கான மூலப்பொருட்களை வாங்குவதற்கான நிதியும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒதுக்கப்படுகின்றது.

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய ஒரு தூய்மைப்பொறியாளருக்கு மாதம் ரூ.700-ம், அதற்கான பொருட்களை வாங்க ரூ.300 என மாதம் 1,000 ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அதேபோல, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1,500, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.2,250, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.3000 என நிதி ஒதுக்கீடு செய்து மாதந்தோறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டுமென ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளாக பல ஆயிரம் அரசுப்பள்ளி தூய்மைப்பொறியாளர்களுக்கு மாதச்சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை. பல இடங்களில் மிகக்குறைவாக வழங்கப்படுகிறது.

அதேபோன்று, பணி ஓய்வு பெற்ற தூய்மைப்பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதுமில்லை என்பதால் தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகளில் தூய்மைப்பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், அப்பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், தங்கள் சொந்த செலவில் ஆட்களை நியமித்து கழிப்பறைகளைச் சுத்தம் செய்து வருகின்றனர்.

சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமும், சில பள்ளிகளில் மாணவ மாணவியரிடம் கட்டணம் வசூல் செய்தும் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. சில பள்ளிகளில் மாணவ மாணவியரே படிப்பை விடுத்து கழிவறைகளைச் சுத்தம் செய்யும் நிலையும் உள்ளது. பல பள்ளிகளில் திறந்தவெளி கழிப்பறையை மாணவ – மாணவியர் பயன்படுத்த வேண்டிய அவலநிலையும் உள்ளது. அறிவைக் கற்பித்து நாளைய தலைமுறையை உருவாக்கும் பள்ளிகளில் அடிப்படை மனித தேவையான கழிப்பறை வசதிகூட ஏற்படுத்தி தரமுடியாத திராவிட மாடல் அரசு வளர்ச்சி, முன்னேற்றம், சாதனை என்றெல்லாம் பேசுவது வெட்கக்கேடானது.

உள்ளாட்சி அமைப்புகளில் போதிய நிதி ஆதாராம் இல்லை என்பதாலும், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால் அவை முடங்கியுள்ளதாலும் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப்பொறியாளர்களுக்கு உரிய ஊதியத்தை அவற்றால் வழங்க முடிவதில்லை. அதுமட்டுமின்றி, அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப்பொறியாளர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கடந்த 2010ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண்:385ஆனது கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதும் மிகப்பெருங்கொடுமையாகும்.

ஆகவே, தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களின் உடல்நலனைப் பாதுகாத்து அவர்களின் எதிர்காலம் சிறக்க, தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் அரசாணை எண் 385/2010இன் படி அவர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.