போதைப்பொருள் பறிமுதலுக்கும் பகல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு: என்ஐஏ!

குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதலுக்கும் பகல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரின் பகல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை என்ஏஐ போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏ போலீஸார் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது என்ஐஏ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி கூறியதாதாவது:

பகல்காம் தாக்குதலுக்கும், ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதலுக்கும் தொடர்பு உள்ளது. இந்தத் தீவிரவாதத் திட்டங்களை அரங்கேற்றுவது லஷ்கர் இ தொய்பா (எல்இடி) தீவிரவாத அமைப்புதான். அந்த அமைப்புதான் இந்தியாவுக்குள் குஜராத் வழியாக போதைப் பொருட்களை கடத்தி, இளைஞர்களுக்கு அவற்றை விற்பனை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளது.

போதைப் பொருட்களை விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் நிதி மூலம், தீவிரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றுவது எல்இடி தீவிரவாத அமைப்பின் சதித்திட்டமாகும். இதன்மூலம் இந்தியாவை பலவீனப்படுத்த அந்த அமைப்பு முயல்கிறது. அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பகல்காமில் தீவிரவாதிகள் எந்த மாதிரியான தாக்குதலை நடத்தி உள்ளார்கள் என்பதை அறிவீர்கள்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் ஆசாமியின் மூலம், பாகிஸ்தானின் ஐஏஎஸ் உதவியுடன் இந்த போதைப்பொருள் கடத்தப்படடுள்ளது. ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த 2,988.2 கிலோ எடையுள்ள போதைப்பொருள், டால்கம் பவுடர் என்ற பெயரில் கடத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பணம் மூலம் தீவிரவாதத் திட்டங்களை அவர்கள் செயல்படுத்துகின்றனர். இவ்வாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.