மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது:-
சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்கிற மத்திய அரசின் முடிவு- சர்வதேச விதிகளுக்கு மிக மிகப் புறம்பானது. அந்த நாட்டு மக்களுக்கு குடி தண்ணீர், விவசாயம் ஆகியவற்றிற்காக சிந்து நதி நீரை பயன்படுத்துவது என்பது இரு நாடுகள் செய்து கொண்டிருக்கக் கூடிய ஒப்பந்தம். பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை என்ற பெயரில் – கோடிக்கணக்கான மக்களின் குடிநீர், உணவோடு சம்பந்தப்பட்ட நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது மனிதாபிமானமற்றது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.
பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். கொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய வகையிலும் பயங்கரவாதிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாநில முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துவது என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். அதன்படி கடந்த இரண்டு மூன்று நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறோம்.
பாஜக-வைப் பொறுத்தவரை அவர்களுக்கு தேசபக்தி எல்லாம் கிடையாது. அவ்வாறு இருந்திருந்தால், பிரதமர் மோடி, உடனடியாக ஜம்மு – காஷ்மீருக்குத் தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், 26 உயிர்களை வைத்து, அவர் பீகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். எந்தவொரு சம்பவம் நடந்தாலும், அதைத் தன்னுடைய அரசியலுக்கு எப்படி பயன்படுத்துவது எனும் தீய நோக்கத்தோடு தான் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக வந்திருப்பவர்களை இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்வது மிக மிகத் தவறானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.