பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ளுங்கள் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பகல்காம் தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மைப்போல அமைதியையும், மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக்கடந்த மனிதத்தை வளர்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயம் அடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்ததை நிறுத்தி இருக்கிறது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியதுடன் இந்தியா உடனான சிம்லா ஒப்பந்ததையும் ரத்து செய்திருக்கிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் நேர்மையான விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்திருக்கிறது.
இந்த கொடூரமான சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது விஜய் ஆண்டனியும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து நேற்று நடந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் நிகழ்ச்சியிலும் விஜய் ஆண்டனி பேசினார். அவர் பேசும் போது, ‘பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. பகல்காம் தாக்குதல் விவகாரத்தில் வீணாப்போன நாலு பேர் தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது’ என்று பேசினார்.