நயன்தாரா நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான டெஸ்ட் திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அந்தப் படத்தால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு 50 கோடி ரூபாய்வரை நஷ்டம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய படத்தில் நடிப்பதற்காக பல கோடி ரூபாய் சம்பளத்தை நயன்தாரா கேட்டதாக தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.
நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா; சில வருடங்கள் அவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் முடிந்த பிறகும் படு பிஸியாக நடித்துவருகிறார் நயன்.
இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே நடித்துவந்த அவர் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார். மெகா ப்ளாக் பஸ்டரான அந்தப் படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. ஜவான் வெற்றிக்கு பிறகு நயனுக்கு ஹிந்தியிலும் சில ஆஃபர்கள் வந்ததாக கூறப்பட்ட சூழலில்; எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை என்றாலும் தமிழில் பிஸியாக இருக்கிறார் அவர். அந்தவகையில் ராக்காயி, மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கும் அவர்; சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இது தவிர்த்து டாக்சிக் படத்திலும் நடித்திருக்கிறார் அவர். இப்படி படு பிஸியாக நடித்துவரும் அவரை சுற்றி பிரச்னைகளும் அடிக்கடி முளைக்க தொடங்கியிருக்கின்றன. முதலில் ஆவண பட விவகாரத்தில் தனுஷுக்கும் நயனுக்கும் முட்டிக்கொண்டது. இந்த விஷயம் முற்றிப்போனதைத் தொடர்ந்து வழக்காக நீதிமன்றத்தில் இருக்கிறது. அதேபோல் மதுரைக்கு ஒரு விழாவுக்கு தாமதமாக சென்றது; ரஜினிகாந்த் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் ஒரு பேட்டியில் பேசியது என பிரச்னைகளுக்கு மத்தியிலேயே வாழ ஆரம்பித்திருக்கிறார் அவர். இருப்பினும் அதுகுறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாத அவர்; தன்னுடைய கரியரில் தீவிர கவனத்தை செலுத்திவருகிறார்.
அவர் இப்போது ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறார் என்று சொல்லப்படும் சூழலில் அவர் குறித்து தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து அனில் ரவிபுடி ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயனை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்த அனில்; சமீபத்தில் நயனை சந்தித்து கதையை கூறினாராம். கதையை கேட்டுவிட்டு நடிப்பதற்கு ஓகேதான்; ஆனால் சம்பளமாக 18 கோடி ரூபாய் வேண்டும் என்று அவர் கூறியதாகவும்; அதனை கேட்டு தயாரிப்பாளரும், இயக்குநரும் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. நயன் நடிப்பில் கடைசியாக வெளியான டெஸ்ட் படுதோல்வியை சந்தித்திருந்தாலும்கூட அவர் என்ன தைரியத்தில் இத்தனை கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.