பகல்காமில் கடந்த ஏப்.22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்துக்கு பின்பு மத்திய அரசு அறிவித்துள்ள ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பகல்காம் தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் சுரிந்தர் சவுதரி, ஏப்.22-ம் தேதி நடந்த பகல்காம் தாக்குதல் பற்றி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அத்தீர்மானத்தில், “பகல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து இந்த அவை தனது அதிர்ச்சியையும், கவலையையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் கோழைத்தனமான கொடுமையான தாக்குதலை இந்த அவை கடுமையாக கண்டிக்கிறது.
இந்த பயங்கரவாத தாக்குதல் காஷ்மீரின் தனித்துவமான கலாச்சார அடையாளம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அவை ஆறுதலாக நிற்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுகிறவர்களுக்கு அவை தனது இரங்கலையும், வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறது.
பங்கரவாதிகள் தாக்குதலின் போது அவர்களுடன் துணிச்சலுடன் போராடி சுற்றுலா பயணிகளைக் காக்க தனது இன்னுயிரை இழந்த சைது அடில் ஹுஸைன் ஷாவின் தியாகத்தை இந்த அவை போற்றுகிறது. அவரின் துணிச்சல் மற்றும் தன்னலமில்லாத தன்மை காஷ்மீரின் உண்மையான உணர்வினை வெளிப்படுத்துகிறது. மேலும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாக செயல்படும். ஏப்.23-ம் தேதி நடந்த பாதுக்காப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்துக்கு பின்பு, மத்திய அரசு அறிவித்துள்ள ராஜாங்க நடவடிக்கைகளை இந்த அவை அங்கீகரிக்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், அவை உறுப்பினர்கள் ஏப்.22-ம் தேதி பகல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.