கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி நேரமில்லா நேரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர்.
இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில், நேற்று சட்டப்பேரவையில், கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.
இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான நோக்கம் குறித்து அதற்கான விளக்க உரையில், ‘‘தமிழகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகமானது, அரியலூர், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி திருவாரூர் ஆகிய 8 மாவட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தால், டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதி மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயவில்லை என்பது கண்டறியப்பட்டது.
டெல்டா மாவட்ட இளைஞர்களின் உயர்கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், பின்தங்கிய பகுதி மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கவும், இந்த பகுதி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும், கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு இந்த பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும். இதையடுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைகலைக்கழகம் என்ற புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்க இந்த சட்ட மசோதா செயல்வடிவம் அளிக்கிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வர் இருப்பார். மேலும், பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றில் தலைமை வகிப்பவராகவும் இருப்பார். வேந்தரின் முன் அனுமதியின்றி, கவுரவப் பட்டங்கள் வழங்க இயலாது. பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார்.
துணைவேந்தர் தேடல் குழுவில், வேந்தர் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியும், சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர். குழுவால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் மூவர் பட்டியலில் இருந்து, துணைவேந்தரை வேந்தர் நியமிப்பார்.
பல்கலைக்கழகத்துக்கான நிதியானது, கட்டணம், மானியம், நன்கொடை, பரிசுகள் உள்ளிட்டவை மூலம் பெறப்படும். இதுதவிர, மத்திய அரசு, மாநில அரசு, பல்கலைக்கழக மானியக்குழு அல்லது அரசுகளால் நிர்வகிக்கப்படும் அமைப்புகள் மூலம் பெறப்படலாம்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்படும் சூழலில், பாரதிதாசன் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் வரும். இந்த மாவட்டங்களில் உள்ள அரசுக்கல்லூரிகள், அரசு சார்ந்த தன்னாட்சி கல்லூரிகள் என 19 கல்லூரிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும்.
அதேபோல், கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ், கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரிகள் வரும். இவ்வாறு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதா அறிமுகத்தின்போது, அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த மசோதா நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இன்று பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த மார்ச் 14-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் மார்ச் 15-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. மார்ச் 24-ம் தேதியிலிருந்து மானிய கோரிக்கை விவாதம் தொடங்கியது. ஏப்.29-ம் தேதியுடன் கூட்டம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று நிறைவாக 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் மீது விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அத்துடன் பேரவை நிகழ்வுகள் நிறைவடையும்.