டெல்லியில் அமித்ஷாவுடன், நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

டெல்லியில் அமித்ஷாவுடன், நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது பேசியதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதிலிருந்தே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த சூழலில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 10-ந் தேதி சென்னை வந்தார். அப்போது, தமிழக பா.ஜனதா தலைவர் மாற்றம் நிகழ்ந்தது. புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வானார். அதேநேரம், 2026 சட்டசபை தேர்தலையொட்டி அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியும் மலர்ந்தது.

இந்த நிலையில், தமிழக பா.ஜனதாவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக அவர் நேற்று தலைநகர் டெல்லிக்கு சென்றார். அங்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று பகல் 1 மணியளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் வரை நீடித்தது.

இந்த சந்திப்பின்போது, வருகிற 2026 சட்டசபை தேர்தல் கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, குறித்தும், கட்சியில் நிர்வாகிகள் நியமனம், பூத் கமிட்டியை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் தீவீர ஆலோசனை நடத்தினார்கள். சந்திப்பின்போது, தமிழகத்தில் பா.ஜனதாவை வளர்ப்பது தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷா,நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக தெரிகிறது.

முன்னதாக நயினார்நாகேந்திரன், நேற்று மதியம் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று. பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்த தமிழக டாக்டர் பரமேஸ்வரனின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். பின்னர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.