பயங்கரவாதிகள் தாக்குதலைக் கூட கண்டிக்க மனம் இல்லாத தமிழக தலைவர்கள் உள்ளனர் என்று மராட்டிய கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பகல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்காக சிந்து நதிநீரை தடுக்க கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவனும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்கக் கூடாது என கூறியிருந்தார்.
திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஆன்மிக கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு முதன்மை விருந்தினராக மராட்டிய மாநிலம் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அந்த கருத்தரங்கில் சிபி ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் 26 நபர்கள் கொல்லப்படுகிறார்கள் தமிழ்நாட்டில் உள்ள யூடியூபர்கள் உண்மைகளை பேச வேண்டாமா? ஒருவர் இது திட்டமிட்ட சதி எனக் கூறுகிறார். யார் திட்டமிட்ட சதி பாகிஸ்தானியர்கள் என கூறுவதற்கு கூட மனம் இல்லாமல் இருக்கிறார்கள்.
26 பேர் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக சிந்து நதிநீரை நிறுத்தலாமா என கேள்வி எழுப்புகின்றனர்? நான் கூறுகிறேன் தயக்கம் இல்லாமல் பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீரை தந்து கொண்டு இருந்தோம். சிந்து நதி நீரை குடித்து விட்டு துப்பாக்கியை எடுத்து வந்து எங்களுடைய சகோதரர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 26 பேரை கொன்றிருக்கிறிர்களே அதுவும் மனைவியின் கண் முன்னே கொன்றிருக்கிறிர்கள். இதைவிட கொடூரம் உலகத்தில் உண்டா என்பதை நினைத்துக் பாருங்கள். இதை கண்டிக்கக் கூட மனம் இல்லாமல் இருக்கும் தலைவர்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். எங்கே என்று கேட்டால் வீரம் விளைந்த நமது தமிழ்நாட்டில் என்பதுதான் வேதனைக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.