சிறுவனை உயிருடன் முழுங்கியதாக கூறி ராட்சத முதலையை இழுத்துவந்து உடலை கிழிக்க முயன்ற கிராம வாசிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மத்தியப் பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் கிராமத்தில அந்தர் சிங் என்ற 10 வயது சிறுவன் சம்பல் ஆற்றில் குளிக்க சென்றான். வெகு நேரமாகியும் அவன் கரைக்கு திரும்பவில்லை. அந்தர் சிங்கை ராட்சத முதலை விழுங்கியதாக கிராமத்தினர் முதலை ஒன்றை ஆற்றிலிருந்து பிடித்து கரையில் கொண்டு வந்து போட்டு அதன் வயிற்றைக் கிழித்து பையனை உயிருடன் மீட்க வேண்டும் என்று முயற்சித்தனர். அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதலை சிறுவனை விழுங்கி இருக்காது என கூறினர். இருந்தாலும் கோபமடைந்த நூற்றுக்கணக்கான கிராமத்தினர் முதலை விழுங்கியதாகக் கருதப்படும் அந்தர் சிங்கின் பெற்றோரும் முதலையை கிழித்து பையனை மீட்க வேண்டும் என்றும் பையன் உயிருடன் இருப்பான் என்று நம்பினர். முதலை வாயில் பெரிய பிரம்பு கம்பு ஒன்றை சொருகியுள்ளனர், அதனால் பையனை முதலை கடித்துத் தின்னாமல் இருக்கும் என கிராமத்தினர் எண்ணினர். மேலும் அவர்கள் அந்தர் சிங்கின் பெயரைச் சொல்லி அழைத்தனர்.
இதற்கிடையில் சம்பல் நதியின் ஆழமான பகுதிக்கு 10 வயது சிறுவன் நீந்தச் சென்றதால் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆனால் கிராமத்தினரோ முதலையை கிழிக்கும் வரை அதை விட மாட்டோம் என்று சிறைப்பிடித்து வைத்தனர். நதியில் தேடச்சென்ற குழுவும் இன்று காலை வரை பையன் கிடைக்காததால் தேடலையும் நிறுத்தி விட்டனர். கிராமத்தினர் முதலைகள் மனிதனை உண்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பல் ஆற்றில் நிறைய முதலைகள் இருப்பதாகவும் புகார் அளித்தனர். சில கிராமத்தினர் பையனை முதலை விழுங்கியதை நேரில் கண்டதாகவும் கூறினார்.
கடைசியில் ஒருவழியாக போலீசார் முதலையைக் கிழிக்காமல் கிராமத்தினரிடமிருந்து முதலையை மீட்டனர், ஆனால் சிறுவன் கதி என்னவென்று தெரியவில்லை. பையன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை, முதலை விழுங்கி விட்டது என்றே கிராமத்தினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
இதுகுறித்து ரகுநாத்பூர் காவல் நிலையப் பொறுப்பாளர் ஷியாம் வீர் சிங் தோமர் கூறுகையில், “சம்பல் ஆற்றில் அந்த சிறுவன் குளித்துக் கொண்டு இருந்தான். அப்போது அந்த சிறுவன் எதிர்பார்க்காத வகையில் ஆழமாகச் சென்றுவிட்டான். அந்த சமயத்தில் தான் குழந்தையை முதலை விழுங்கியதாகக் கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அவர்களாகவே முதலையைப் பிடித்தனர். இந்த விவகாரத்தில் முதலை சிறப்புக் குழு அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது” என்றார்.
பொதுவாக முதலை எந்தவொரு விலங்கையும் விழுங்கிவிட்டால், அவர்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இதனைக் கஷ்டப்பட்டுச் சிறப்புக் குழுவினர் அந்த கிராம மக்களுக்குப் புரிய வைத்து உள்ளனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னரே, சிறப்புக் குழுவினர் சொன்னதைக் கேட்டு கிராம மக்கள் முதலையை விடுவித்தனர்.