காவல்துறையினர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் சகோதர-சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளை ஒருமித்த குரலில் அரசிடம் கோரி பெறுவதற்கு ஊழியர் சங்கம் கட்டமைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நெடுங்கால கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
சட்டம் – ஒழுங்கு, குற்றத்தடுப்புப் பிரிவு, மதுவிலக்கு, போக்குவரத்து, ஆயுதப்படை, கடலோரக் காவல், புலனாய்வு, உளவுத்துறை எனப் பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாடு காவல்துறையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் ஏறத்தாழ ஒரு இலட்சம் ஆண் காவலர்களும், 20 ஆயிரம் பெண் காவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப்பேரிடர் காலங்களிலும், கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும், பண்பாட்டு விழாக்கள் – கோயில் திருவிழாக் காலங்களிலும், அரசியல் கூட்டங்கள் – தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் வருகை காலங்களிலும், சாதி – மதக்கலவரங்கள் நிகழும் காலங்களிலும், குண்டுவெடிப்பு – தீவிரவாத் தாக்குதல் போன்ற எதிர்பாராத பதற்றச்சூழலிலும், தீ விபத்து, சாலை விபத்து போன்ற அசாதாரணச் சூழல்களிலும், சாலை மறியல், மாணவர் போராட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட மக்கள் திரள் புரட்சிப்போராட்டங்கள் நடைபெறும் காலங்களிலும் இரவு-பகல் பாராது, கண் துஞ்சாது, கொடும்வெயில், கடுங்குளிர், அடைமழை என எதையும் பொருட்படுத்தாது, தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து, மக்கள் தொண்டாற்றும் காவல்துறையினர் தங்கள் நியாயமான உரிமைகளைக் கேட்டுப்பெற முடியாத நிலையில் இருப்பதுதான் பெருங்கொடுமையாகும்.
அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டாலும், அத்தியாவசிய சலுகைகள் மறுக்கப்பட்டாலும், அரசின் அடக்குமுறை, அதிகாரிகளின் அழுத்தம் என்று எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், அத்தனையையும் பொறுத்துக்கொண்டு காவல்துறையினர் கொத்தடிமைகள் போல வேலை செய்ய வேண்டிய கொடுஞ்சூழல் நிலவுகிறது. தங்கள் மீதான அதிகார அடக்குமுறை, உரிமை பறிப்பு, அடிப்படைத் தேவைகள், ஊதிய உயர்வு, போதிய விடுமுறை இன்மை உள்ளிட்ட எதுவொன்றிற்கும் அறவழியில் கூட போராட முடியாத கடுமையான கட்டுப்பாடு காவல்துறையினருக்கு மட்டுமே உள்ளது.
அரசு மற்றும் உயர் அதிகாரிகள் மீதான தங்களின் ஆத்திரம், கோபம் மற்றும் இயலாமை ஆகியவைதான் பணியின்போது சந்திக்கின்ற மக்கள் மீது வெளிக்காட்டுகின்ற சூழல் உருவாகி, பொதுமக்கள்-காவல்துறை மோதலாக வெடிக்கிறது. காவலர்கள் தங்களது பணியில் எத்தகைய இடையூறு வந்தாலும் அனைத்தையும் தங்கள் மனதிற்குள் போட்டுப் பொசுக்கிகொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். அதன் காரணமாக உருவாகும் மன அழுத்தமே காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமைகளும் அரங்கேறுகிறது.
உயிர் காக்கும் மருத்துவர்கள், அறிவைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் முதல் டாஸ்மாக் ஊழியர்கள் வரை அனைவரும் சங்கம் அமைக்கவும் அதன் மூலம் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெறவும் வாய்ப்பு உள்ள நிலையில் காவல்துறைக்கு மட்டும் அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படுவது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதாகும். காவல்துறையில் பணியாற்றுபவர்களும் நம்மைப்போல உயிரும், உணர்வும், இரத்தமும் சதையும் கொண்ட சக மனிதர்கள்தான் என்பதை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் எப்போது உணர்ந்துகொள்ள போகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அனைத்து காவலர்களும் தங்களுடைய நியாயமான கோரிக்கையை ஒருமித்த குரலில் அரசிடம் முன் வைத்து உரிமைகளைப் பெறுவதற்கு வாய்ப்பாக ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.