உதய்பூர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வர் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ரியாஸ் அக்தாரியுடன் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது:-
உதய்பூர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பாஜகவுக்கு தொடர்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் வீட்டு வாடகையும் முறையாக செலுத்தவில்லை. இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்குவதற்கு முன்பே, பாஜக நிர்வாகிகள் சிலர் வாடகை வீட்டின் உரிமையாளரை அழைத்து, ‘அவர்கள் எங்களது கட்சியை சேர்ந்தவர்கள் (குற்றம் சாட்டப்பட்டவர்கள்) என்றும், அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றும் கூறி மிரட்டியுள்ளனர். எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாஜகவிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், முதல்வர் கெலாட்டின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.