அன்பில் மகேஸ் ஒட்டுமொத்த தேர்வுகளை வேண்டாம் என்று சொல்கிறாரா: வானதி சீனிவாசன்!

சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்ச்சி விவகாரம், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று தேசியளவு பல முக்கியத்துவமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதற்கு காரசாரமாக பதில் அளித்துள்ளார்.

கோவை, சித்தாப்புதூர் பகுதியில் புதிய நவீன அங்கன்வாடி மையம் திறக்கும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

கடந்த ஒன்றரை மாதமாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. கோவை தெற்கு தொகுதி சார்ந்த பிரச்னைகள், மக்களின் தேவை குறித்து எடுத்து சென்றுள்ளேன். இதற்கு அமைச்சர்களும் பதில் அளித்துள்ளனர். முதலமைச்சரும் பதில் அளித்துள்ளார். மேலும் மாநில அரசு என் தொகுதியில் செய்யப்பட்ட செலவினங்களை உரிய மதிப்பீட்டுடன் பட்டியலாக கொடுத்துள்ளனர். இத்தனை திட்டங்கள் கோவை பகுதியில் செயல்படுத்தப்படுவது சிறப்பு தான். என் ஆலோசனைகளை தொடர்ந்து கூறி வருகிறேன். சட்டப்பேரவை தலைவரின் குறுக்கீடுகள், நேரம் குறைவாக ஒதுக்குதல் போன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன.

மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்துள்ளனர். இதன் மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில், மக்களின் மேம்பட்ட வசதிகளை செய்து கொடுக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களை எப்போதுமே பிரதானமாக வைத்திருப்பார். கடந்த 12 வருடங்களில் இல்லாதளவுக்கு ஓ.பி.சி பிரிவினர் அமைச்சரானது, தேசிய ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளித்தது, பழங்குடி மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தியது என்று பல்வேறு விஷயங்களை பிரதமர் செய்து கொடுத்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு வாயிலாக பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தனர். நம்முடைய நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஏதாவது மாநிலத்துக்கு தேர்தல் வந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த திட்டத்தை அறிவித்தாலும் இது தேர்தலுக்காக என்று சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். அதனால் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இலக்கை நோக்கி செயல்படுகிறோம். பீகார் தேர்தலை மனதில் வைத்து மட்டுமே இப்படி செயல்படவில்லை. ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சிக்காகவே நாங்கள் நினைக்கிறோம். 2011 ஆம் வருடம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பக் கணக்கெடுக்கின்படி மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அடுத்து வரக் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொருளாதார ரீதியிலான முன்னேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 2047 ஆம் ஆண்டில் இந்தியா எல்லாவற்றிலும் முழுமை அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு.

சர்வதேச ஆய்வுகளில், குழந்தைகள் 8, 9 வகுப்புகளை தாண்டி செல்கிறார்கள். அவர்களால் ஒரு பக்கத்தை கூட முழுமையாக படிக்க முடிவதில்லை என்று கூறுகிறார்கள். ஒரு பெரிய அளவிலான கணக்கை கூட அவர்களால் போட முடியவில்லை என்றும் ஆய்வறிக்கை சொல்கிறது. நாம் கல்விக் கூடங்களை நடத்துகிறோம். கல்வி திட்டங்களை கொடுக்கிறோம். ஆனால் எந்தளவுக்கு தரமாக கொடுக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அமைச்சர் அன்பில் மகேஸ் சொல்வதைப் பார்த்தால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தேவையில்லையே. எல்லோரையும் பாஸ் செய்துவிட்டு செல்லலாமே. அன்பில் மகேஸ் ஒட்டுமொத்த தேர்வுகளை வேண்டாம் என்று சொல்கிறாரா. போட்டி தேர்வுகளுக்கு என்ன அளவுகோல் வைப்பது. குழந்தைகள் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக.. படிக்கிறார்களோ அல்லது படிக்கவில்லையோ அனைவரையும் பாஸ் செய்து விடுகிறார்கள். இது மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும்.

தற்போது பொறியியல் பட்டதாரிகள் அதிகமாக வேலை கேட்டு வருகிறார்கள். என்னுடைய எம்எல்ஏ அலுவலகத்திற்கு வேலை கேட்டு வரக் கூடியவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் முடித்தவர்கள் தான். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லாரும் தனியார் பள்ளியை தேடும்போது, அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. அரசு பள்ளிக் கூடங்களில் மாணவர்களின் அறிவை வளர்க்கக் கூடிய வகையில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது வடமாநிலங்கள் கல்வியில் 40 வருடங்கள் பின் தங்கியவை. அதனால் அவர்களுடன் ஒப்பிட்ட கூடாது. தமிழ்நாட்டின் இலக்கை உயரமாக வைத்து நகர வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். நீட் தேர்வை இன்றைய மாணவர்கள் ஏற்க தொடங்கிவிட்டனர். நீட் தேர்ச்சி விகிதமும் தமிழ்நாட்டில் நன்றாக உள்ளது.. இது மக்களுக்கான பிரச்னை இல்லை. திமுகவின் அரசியல் பிரச்னை. வரும் காலத்திலும் முதல்வர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை மாற்றிக் கொண்டே தான் இருப்பார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் இருக்கக் கூடிய எத்தனை அமைச்சர்கள், அமைச்சர் அடைமொழி இல்லாமல் மக்களை சந்திப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சில சமயம் அவர்கள் மக்களையே சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகலாம். இதை நாங்கள் எச்சரிக்கையாக சொல்லவில்லை. நீங்கள் செய்த செயலுக்கான வினையை தான் விரைவில் சந்திப்பீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.