திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை: நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த விவசாயி ராமசாமி (75), அவரது மனைவி பாக்கியம்மாள் (65) இருவரும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களது வீட்டில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு வயதான தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியை அறிந்து கடும் அதிர்ச்சியுற்றேன்.

தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கிலேயே இன்னும் எவ்வித தடயத்தையும் அரசு கண்டுபிடிக்காத நிலையில் கொங்குப் பகுதியில் மீண்டும் மீண்டும் அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நம்மை அச்சத்தில் உறைய வைப்பதோடு, திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்ற கசப்பான உண்மையையும் நமக்கு உணர்த்துகிறது.

எனவே, தமிழகத்தில் இத்தனை துணிச்சலாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளைக் குற்றங்களால் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து விடும் அபாயம் உள்ளதால், இந்தக் கொடும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கைது செய்வதுடன், சீர்கெட்டுப் போய் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும் தாமதிக்காமல் நெறிப்படுத்த வேண்டுமென தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வலியுறுத்துகிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.