கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், ஒகேனக்கலை வந்தடைந்ததால், அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு, அதிக நீர்வரத்தால், அணை பாதுகாப்பு கருதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து நேற்று வினாடிக்கு, 38 ஆயிரம் கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 72 ஆயிரத்து, 964 கன அடி என, மொத்தம், 1 லட்சத்து, 10 ஆயிரத்து, 964 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, நேற்று காலை, 6:00 மணிக்கு வரத் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 19 ஆயிரத்து, 500 கன அடியாகவும், மாலை, 6:00 மணிக்கு, 60 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.
இது இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மெயின்அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட இடங்களில் பாறைகளை மூழ்கடித்தவாறு புதுவெள்ளம் பொங்கி பாய்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் இன்று 3வது நாளாக தடை நீடிக்கிறது.