“தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. விஜய்யைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை” என பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரையில் ராம சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீப காலங்களில் எதிர்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதன் பலன்கள் சமூகத்துக்கு எப்படி போகும் என்பது குறித்து ஒரு வரி கூட அவர்கள் பேசவில்லை. அதற்கு பதிலாக மோடி அரசு ஏமாற்றுகிறது என பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்தியாவில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி. அதில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக மத்திய அரசில் திமுக பங்கெடுத்துள்ளது. இந்திய மாநில கட்சிகளில் மத்திய அரசில் அதிக ஆண்டுகள் பங்கெடுத்தது திமுகதான். அப்போதெல்லாம் இரு கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை. மொத்தத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புதான் நடத்தப்பட்டு வந்தது.
இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் பட்டியல் சமூகம், பழங்குடியினர் புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையால் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரியாகவும் கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் மட்டுமே மேற்கொள்ள முடியும். மாநில அரசால் கணக்கெடுப்பு நடத்த முடியாது.
2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். கரோனா பரவல் காரணமாக கணக்கெடுப்பு 3 ஆண்டுகள் தள்ளிப்போனது. இதனால் பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பல சமுதாயங்களுக்கு நன்மைகள் ஏற்படும். இப்போது சாதி வாரியாக அறிவியல் பூர்வமான புள்ளிவிவரமும் இல்லை. அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டை சாதிவாரியான புள்ளி விவரம் இல்லாததால் நீதிமன்றம் ரத்து செய்தது.
தேவேந்திர குல வேளாளர் சமூகம் அரசாணை பெற்ற பிறகு பட்டியல் அட்டவணையில் இருந்து வெளியேற்றம் கேட்கின்றனர். அந்த கோரிக்கைக்கு பொது வெளியிலும், சமூகத்துக்குள்ளாகவும் ஆதரவு உள்ளது. பட்டியலில் இருந்து வெளியேறினால் அந்த சமூகத்துக்கு எவ்வளவு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் இப்போது குழப்பம் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையடையும் போது தமிழகத்தில் பல்வேறு சமூகங்களுக்கு நீதி கிடைக்கும்.
தென் மாவட்டங்களில் டிஎன்டி சமூகத்தினர் ஒற்றை சான்றிதழ் கேட்கின்றனர். நீதிக்கட்சி ஆட்சியில் தான் குற்றப்பரம்பரை சட்டம் கொண்டு வரப்பப்பட்டது. வட மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் டிஎன்டி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் டிஎன்டி சமூகத்தினர் பலன் அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் டிஎன்டி சமூகத்துக்கு ஒற்றை சான்றிதழ் கூட கொடுப்பதில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகு அவர்களுக்கு உரிய பலன் கிடைக்கும். அடுத்த ஆண்டு கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு ஓர் ஆண்டில் முடியும். சமூக நீதி கிடைக்கவும், சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை வழங்கவும் இந்த கணக்கெடுப்பு உதவும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.5 ஆயிரம் கோடி செலவில் சர்வே முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எட்டேகால் கோடி தவறுகள் இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்தக் கணக்கெடுப்பை வெளியிட முடியவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது அழுத்ததால் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது என்பது சரியல்ல. இது கண்துடைப்புக்காகவும், பிகார் தேர்தலுக்காகவும் நடத்தப்படவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது திருமாவளவனின் கோரிக்கை. அதை பிரதமர் மோடி செய்யும் போது திருமாவளவன் பாராட்டியிருக்க வேண்டும், அவர் விமர்சனம் செய்வது தவறு.
அதிமுக எப்போதும் பாஜக கூட்டணியில்தான் உள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் தவிர்த்து, பல்வேறு தேர்தல்களில் அதிமுக பாஜக கூட்டணியில்தான் இருந்துள்ளது. பாஜக – அதிமுக கூட்டணியை பார்த்து திமுக பயப்படுகிறது. திமுகவுக்கு நடுக்கம் வந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். திமுவுக்கு எதிரான ஒவ்வொரு ஓட்டும் எங்களுக்கு முக்கியம். திமுக எதிர்ப்பு ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். திமுவை வீழ்த்த நினைக்கும் அனைவரையும் வரவேற்போம். பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்வது தான் கூட்டணி. தேர்தல் நேரங்களில் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. தமிழகத்திலும், பிஹாரிலும் இண்டியா கூட்டணி வீழ்ச்சியடையும்.
விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. இது விஜய்க்கு புரியாது. அவருக்கு போதுமான அனுபவம் இல்லை. விஜய்யைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை. தமிழகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என கனவு கண்டாலோ, போலீஸார் வழக்கு பதிவு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.