தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிடிவி தினகரன் வெளியுட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்க வேண்டிய 250 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க மறுக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு நெல் உற்பத்தியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதலுக்கான நிதியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவிக்கும் நிலையில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கான நிதியை உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரப்போக்கு டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 2016-17 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இருந்து நெல் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரெனெ ஏப்ரல் மாதத்திற்கான நெல் கொள்முதலை தன்னிச்சையாக ரத்து செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதோடு, இனிவரும் காலங்களிலும் எந்தவித பாரபட்சமுமின்றி தொடர்ந்து நெல்கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என நுகர்பொருள் வாணிபக் கழகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.