பட்டுக்கோட்டையில் முன்னாள் கட்சி நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. யார் இதை செய்திருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திற்கு முன்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்களை சந்தித்து புதிய நிர்வாகிகள் நிர்வகிப்பது குறித்த வேலைகளை மேற்கொள்கிறோம். திமுக வந்த பிறகு தொடர்ந்து படுகொலைகள் நடக்கிறது. பட்டுக்கோட்டையில் முன்னாள் கட்சி நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. யார் இதை செய்திருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகிரி சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும், கொங்கு பகுதியில் தோட்டத்தில் வசிப்பார்கள். திமுக ஆட்சிக்கு வராத காலத்தில் எவ்வித அச்சம் இல்லாமல் இருந்தனர். தற்போது தோட்டத்தை காலி செய்துவிட்டு வெளியூர் செல்கின்றனர். அதேபோல், பல்லடத்தில், 7 கொலைகள் கஞ்சா போதையால் நடந்தது.
தமிழகத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர். இதில், காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை. இந்த சம்பவங்களால் தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என தெரிகிறது. கஞ்சா, போதை பொருள் காரணாமாகவே கொலை சம்பவங்கள் நடக்கின்றன. வங்காளதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற சூழலில் நாம் தமிழ் நாட்டில் இருக்கிறோமா வேறு எங்கேயாவது இருக்கிறோமா என்ற பதற்றமான சூழல் இருக்கிறது.
கொங்கு பகுதியில், கோடை விடுமுறைக்கு தோட்டத்திற்கு வந்த குழந்தைகள் என அனைவரும் திரும்பி செல்கிறார்கள். இதில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதுரை ஆதீன விவகாரத்தில், காவல் நிலையத்தில் யார் வழக்கு தொடுக்கிறார்களோ அவர்களை தான் முதலில் திமுக பிடிக்கும். அது போன்று தான் மதுரை ஆதீனம் விவகாரத்திலும் நடைபெற்று உள்ளது. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதப் பிரச்சினைகள் குறித்து நாங்கள் பேசவில்லை. நாங்கள் முதலமைச்சரின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுக்களை வாங்குவதற்காக நாங்கள் மதம் குறித்து பேசுவதாக தூண்டி விடுவதே முதலமைச்சர் தான். இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் ஓட்டுக்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு வரும். எனக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.