கவுண்டமணி மனைவி மறைவிற்கு சீமான் இரங்கல்!

கவுண்டமணி அவர்களின் மனைவி அண்ணி சாந்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற கலை அடையாளங்களுள் ஒருவரும், தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும், மாபெரும் திரையுலக ஆளுமையுமான பெருமதிப்பிற்குரிய அண்ணன் கவுண்டமணி அவர்களின் மனைவி அண்ணி சாந்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். உயிர்த்துணையை இழந்து வாடும் அண்ணனுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தனது நகைச்சுவைத்திறனால் கவலையை மறக்கச் செய்து, எல்லோரையும் சிரிக்க வைத்த மாபெரும் கலைஞனுக்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு ஈடு இணையற்றதாகும். இப்பெருந்துயரிலிருந்து மீண்டுவர அண்ணன் கவுண்டமணிக்கு பெருந்துணையாக நிற்போம்.

அண்ணி சாந்தி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.