முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இதனால், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. வீட்டில் சிறிது நாட்கள் ஓய்வெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும் அரசுப் பணிகளை தொடங்கினார். இன்று காலை, சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவருடன், அவரது மகனும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்நிலையில், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக, சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவிலிருந்து குணமடைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதேபோல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்”. என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அயராது தமது பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது நிலையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தம்மை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து இருக்கிறார். அவர் விரைவில் பூரண நலம்பெற்று தனது மக்கள் நலப்பணிகளை தொடர வேண்டுமென விழைகிறேன்.” என்று பதிவிட்டு உள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட செய்தி வருத்தம் அளிக்கிறது. எல்லாம் வல்ல கந்தனின் ஆசியால் அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனா தொற்றின் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.