காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய, தேர்தல் நடத்துவது குறித்து வியாழக்கிழமை அன்று ஒரு கூட்டத்தை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாடு செல்வதால், கட்சியின் மிக முக்கியமான அந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியை சோனியா காந்தி வகித்து வருகிறார். இந்த நிலையில், மீண்டும் இந்த பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.