உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 7 பேர் பயணித்த நிலையில், அதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் படை நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

நமது நாட்டில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா செல்லும் போக்கு மெல்ல அதிகரித்து வருகிறது. ஏரோபிளைன் என்றால் ஓடுபாதை தொடங்கிப் பல விஷயங்கள் தேவை. ஆனால், ஹெலிகாப்டருக்கு அப்படி இல்லை. சிக்கலான இடங்களிலும் கொஞ்சம் இடம் இருந்தாலே எளிதாகத் தரையிறங்கவும் பறக்கவும் முடியும். மேலும் குறைந்த எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்ல ஹெலிகாப்டரே சிறந்தது. இந்தியாவில் இப்போது தான் சுற்றுலா ரூட்களில் ஹெலிகாப்டர் சேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஹெலிகாப்டர் பயணம் என்பது எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கும். இதற்குப் பல கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு நெறிமுறைகளும் இருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி சில சமயம் மோசமான விபத்துகள் ஏற்படும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு விமானி உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டர் டேராடூனில் இருந்து ஹர்சில் ஹெலிகாப்டருக்கு செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து, சுற்றுலாப் பயணிகள் சாலை வழியாக கங்னானிக்கு சுமார் 30 கி.மீ தூரத்தைச் செல்லவிருந்தனர். இருப்பினும், அதற்குள் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட குழுக்கள் உடனடியாகக் களத்திற்குச் சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

ஹெலிகாப்டரில் மொத்தம் ஏழு பேர் இருந்த நிலையில், அதில் ஆறு பேர் பலியான நிலையில், ஒருவர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரும் பெண் சுற்றுலாப் பயணிகளாவர். அவர்கள் மும்பையைச் சேர்ந்த கலா சோனி (61), விஜய ரெட்டி (57), ருச்சி அகர்வால் (56), உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராதா அகர்வால் (79) மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த வேதவதி குமாரி (48) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல குஜராத்தைச் சேர்ந்த 60 வயது விமானி ராபின் சிங்கும் விபத்தில் உயிரிழந்தார். இந்த ஹெலிகாப்டரில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கர் (51) என்பவர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். அருகே உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமான விபத்து விசாரணை பணியகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்ட் முதல்வர் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.. இந்த இழப்பைத் தாங்கும் வலிமையைக் கடவுள் அவர்களுக்கு அளிக்கப்படும். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். இந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக நான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அங்கு நிலவும் சூழ்நிலை கவனமாகக் கண்காணித்து வருகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.