மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும் அமைதியைப் பேண வேண்டும்: அன்புமணி!

பாமக சார்பில் ஞாயிறன்று நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும், காவல் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முழு கட்டுப்பாடுடன், இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் வந்து செல்ல வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், அந்த இடத்தில் மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், தென் மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை செல்ல அனுமதியில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். மாறாக, என்எச் 45 என அழைக்கப்படும் சென்னை – திருச்சி சாலை மார்க்கமாகவே மாநாட்டுக்கு செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை பாமக தலைவலர் அன்புமணி இன்று (மே 9) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநாட்டுக்கு அனைவரையும் வரவேற்று வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கு அனைவரையும் வரவேற்கிறேன். மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் முழு கட்டுப்பாடுடன், போலீஸாரின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி அமைதியான முறையில் வாகனத்தில் வரவேண்டும். அதேபோல், மாநாட்டை நிறைவு செய்து மீண்டும் அமைதியான முறையில் ஊர் திரும்ப வேண்டும். நீங்கள் அனைவரும் ஊர் திரும்பும் வரையில் எனக்கு தூக்கம் இருக்காது.

இந்த மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துவோம். அனைவருக்கும் உரிய இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவற்றுக்காகத்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடக உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் வருகின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் அன்புமணி கூறியுள்ளார்.