உலக வரைபடத்தில் பாகிஸ்தானே இருக்காது: அண்ணாமலை!

தீவிரவாதத்திற்கு எதிராக மோடி சங்கல்பம் எடுத்து இருக்கிறார். பாகிஸ்தான் என்ற ஒரு நாடு வரைபடத்தில் இருக்காது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

இந்தியா பாகிஸ்தான் பிரச்னை இன்று நேற்று அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக் கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது. தீவிரவாதம் செய்தவர்களுக்கு பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை தாம் அடிக்கிறோம். ஆனால் இந்தியாவில் மக்கள் மீது போர் தொடுக்கிறார்கள். நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் கோழைகள். இந்தியாவைப் பொறுத்த அளவில் அறத்தின் அடிப்படையில் இருக்கிறோம். பாகிஸ்தான் நம் மீது தொடுக்கும் ட்ரோன்-க்கு பதிலடி கொடுத்து இருக்கிறோம்.

நாம் மிகப்பெரிய பொருளாதார நாடு, பாகிஸ்தான் கூட சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப் போறதில்லை. தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எறிய வேண்டும். அதற்காகத்தான் இந்த போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே, ஒற்றுமையாக ஒரு தாய் பிள்ளையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். தீவிரவாதிகள் பூமியில் எங்கு ஒளிந்து இருந்தாலும், பூமிக்கு கீழ் ஒளிந்திருந்தாலும் தீவிரவாதிகளை பிடித்து இல்லாமல் செய்து விடுவேன் என்று தீவிரவாதத்திற்கு எதிராக மோடியை சங்கல்பம் எடுத்து இருக்கிறார். போர் இன்று, நாளை முடியாது, இதற்கு மேல் நாம் போக தான் போகிறோம். இனி இந்தியாவில் ஒரு உயிர் எடுப்பதற்கு பாகிஸ்தான் பலமுறை யோசிக்க வேண்டும்

பாகிஸ்தானை பொருத்த அளவில் நாடு அதன் கண்ட்ரோலில் இல்லை. நாட்டிற்கு ஒரு ஆர்மி வேண்டும், ஆனால் பாகிஸ்தானிற்கு ஆர்மிக்கு ஒரு நாடு, அங்கு ஆர்மி தான் அரசை கண்ட்ரோல் செய்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. பாகிஸ்தான் என்ற ஒரு நாடு வரைபடத்தில் இருக்காது. பலம் பொருந்திய இந்தியா நாம் அவ்வளவு பலமாக இருக்கிறோம். நாம் நினைத்தால் ஒன்றும் இல்லாமல் பண்ணி விடலாம். ஆனால் அறத்தின் அடிப்படையில் போர் தொடுத்து வருகிறோம். சசிதரூர் எம்பி, இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். பாகிஸ்தானை எதிர்ப்பதில் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள்.

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக திமுக பேரணி நடத்துகிறார்கள். அது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இந்திய அரசிற்கு முழுமையாக தன்னுடைய ஒத்துழைப்பையும் திமுக அரசு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.