நாட்டில் நிலவும் போர் சூழல் குறித்து கருத்து தெரிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
நாட்டில் போர்ச் சூழல் நிலவும் நிலையில், சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை சமூக வலைதளங்கள் மூலம் நமது ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக செய்திகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இவர்களில் சிலர் போர் வேண்டாம் என்றும், இதனால் நஷ்டம் தவிர வேறு எதுவும் கிடைக்காது என்றும் கூறுகின்றனர். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இதுபோன்ற ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகைகளுல் ஒருவராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான சூழ்நிலை மற்றும் போர் சூழல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டார்.
அந்தப் பதிவில், “போர் வேண்டாம் என்று சொல்லுங்கள். ஒரு ஜனநாயக நாட்டின் குடிமகள் என்ற முறையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு இதே வேண்டுகோளை நான் விடுக்கிறேன். மோதலை விட அமைதிக்கு முன்னுரிமை கொடுங்கள். பரஸ்பர புரிதலுக்கு வந்து தேவையற்ற உயிர்கள் காற்றில் பறந்து போகாமல் பார்த்துக் கொள்வோம். ராணுவ வீரர்கள், திறமையானவர்கள், அப்பாவி பொதுமக்கள் ஒருபோதும் இறக்கக் கூடாது. இந்த செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மற்றொரு போரைத் தடுக்க இராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.
பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாவின் தாக்குதல் நடத்தியதும், பதிலுக்கு, பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்தும் வருகிறது. இதற்கு நாட்டில் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதற்கு எதிராக போரை விரும்பாதவர்களின் கருத்துகள் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “பாகிஸ்தானின் தாக்குதலில் இருந்து இந்தியா தனது பிராந்தியத்தை பாதுகாக்கிறது. அது போருக்கு செல்வது என அர்த்தம் அல்ல” என்று அவர்கள் வாதிடுகிறார்கள். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்கள் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலில் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன என்று கருத்து தெரிவித்து தவறு செய்கின்றனர். அவர்களுக்கு அங்குள்ள கள நிலைமை குறித்து குறைந்தபட்ச புரிதலாவது இருக்கிறதா என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.