முதலமைச்சர் ராணுவ வீரர்களை ஊக்குவிக்க பேரணி நடத்துவதாகவும், ஆனால் இந்த நடவடிக்கை யுத்த தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், வடக்காடு கிராமத்தில் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்ட பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுபோன்ற மோதல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் விமர்சித்தார்.
வடக்காடு கிராமத்தில் உள்ள கோவில் மைதானத்தின் உரிமை தொடர்பாக பட்டியல் சாதி மக்களுக்கும் மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே நீண்டகால முரண்பாடு நிலவி வருகிறது. இந்த மைதானம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், திருவிழாவின்போது மோதல் தீவிரமடைந்தது. சம்பவத்தில் வீடுகள், பைக்குகள் மற்றும் உடமைகள் சேதமடைந்தன.
பெ.சண்முகம், மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே இரு தரப்பு மக்களுடன் பேசி திருவிழாவை ஒழுங்காக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்த மோதலைத் தவிர்த்திருக்க முடியும் எனக் கூறினார். மேலும், திருவிழா நாளன்று போதுமான காவல் பாதுகாப்பு இல்லாததால் நிலைமை மோசமடைந்ததாகவும் அவர் விமர்சித்தார்.
காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவம் சாதி மோதல் இல்லை, பொதுவான தகராறு எனக் கூறப்பட்டது. ஆனால், 200 பேர் கூடி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கியது சாதி மோதலாகவே கருதப்பட வேண்டும் என பெ.சண்முகம் கூறினார். இதுபோன்ற அறிக்கைகள் மோதலை மறைக்கும் நோக்கத்துடன் வெளியிடப்படுவதாகவும், இது தவறான முன்னுதாரணத்தை உருவாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நேரடியாக தொடர்பில்லாதவர்களை கைது செய்யக் கூடாது என்றும், ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், எஸ்சி/எஸ்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரினார்.
சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. முறையான கணக்கெடுப்பு கூட நடத்தப்படவில்லை என்று சண்முகம் குற்றம்சாட்டினார். மாவட்ட ஆட்சியர் நேரடியாக கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவில்லை என்றும், இது நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
கோவில் மைதானத்தின் உரிமை தொடர்பாக வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து, இந்தப் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று சண்முகம் வலியுறுத்தினார். நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடிவுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி, தீவிரவாதத்திற்கு எதிரான போர் பதட்டத்தை உருவாக்குவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக சண்முகம் குறிப்பிட்டார். தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை என்றாலும், அப்பாவி மக்களை பாதிக்கும் வகையில் போர் உத்திகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்றார். பேச்சுவார்த்தை மூலம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்றும், போர் அழிவை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்கள் எல்லாம் போரை வரவேற்று பேசுகிறார்கள் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. யுத்தம் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த முடியுமா என்பதை அரசு யோசிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டிய வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை. ராணுவ வீரர்களுக்கு உற்சாகப்படுத்துவது மேலும் இந்த யுத்த தயாரிப்பை விரைவு செய்யதான் உதவும் என்பதால் அப்பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி பங்கேற்கவில்லை என பெ.சண்முகம் தெரிவித்தார்.