மும்மொழிக் கல்விக்கு எதிராக மே 20-ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக சார்பு அணி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
நீட், தேசியக் கல்விக் கொள்கை, விஸ்வகர்மா என தொடர்ந்து சமூகநீதியை அழிக்கும் மத்திய பாஜக அரசின் கொடுஞ்செயல்களை எதிர்கொள்ள திராவிட மாணவர் கழகத்தின் செயல் பாடுகளைத் தீவிரமாக்க வேண்டும்.
தமிழகத்தின் உரிமையை உச்சநீதிமன்றம் மூலம் மீட்ட முதல்வருக்கு பாராட்டு.
பள்ளிக் கல்வித் துறை மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுதலை உள்ளிட்ட நாளிதழ்களை கொண்டு செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். ஜாதி, மத உணர்வைத் தூண்டும் விதமாகச் செயல்படும் அமைப்புகளை மாணவர்களை அணுகவிடாமல் காவல், பள்ளிக் கல்வித்துறைகள் செயல்பட வேண்டும்.
மும்மொழிக் கல்வி கொள்கையை மத்திய பாஜக அரசு திணிப்பதைக் கண்டித்து, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் மே 20-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.