ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாட்டுக்கு கிடைத்த பலன்கள்: வானதி சீனிவாசன்!

பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் இருவரையும் நேரடியாகத் தாக்கி, அவர்கள் தனித்தனி எனும் கருத்தை உடைத்துள்ளது இந்தியா என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் அதற்கு போட்டியாக பாகிஸ்தான் தொடங்கிய ‘பன்யான் உல் மர்சூஸ்’ ஆகிய இரண்டுக்கும் கிடைத்த பலன்கள் குறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவியும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

ஆபரேஷன் சிந்தூரின் பலன்கள் 1. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தேக்க நிலையை உணர்ந்த இந்தியா, அதனிடமிருந்து அனுதாபத்தைக் கோர முயற்சிக்கவில்லை. மாறாக, ஆபரேஷன் சிந்தூர் மூலம் நம் தாய்நாட்டின் இறையாண்மையையும் தன்னம்பிக்கையையும் தெளிவாக வெளிப்படுத்தியது இந்தியா.

2. முதன் முறையாக, பயங்கரவாதிகளுக்கும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் இருவரையும் நேரடியாகத் தாக்கி, அவர்கள் தனித்தனி எனும் கருத்தை உடைத்தது இந்தியா. மேலும் பாகிஸ்தான் அரசின் சில அதிகாரிகள் மட்டுமே பயங்கரவாத தாக்குதல்களை அங்கீகரிக்கிறார்கள் எனும் நம்பிக்கையும் தகர்த்து மொத்த அமைப்பையும் தாக்கியுள்ளது இந்தியா.

3. போரின் நடுவில், பாகிஸ்தான் பன்னாட்டு நிதியத்திடம் (IMF) கடன் வேண்டி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆச்சரியப்படும் விதமாக அதனை IMF-ம் அங்கீகரித்தது. சிறிய போர்களில் ஈடுபட்டாலும் பாகிஸ்தானிடம் ஒரு யுத்தத்திற்கு தேவையான நிதி இல்லாதது குறிப்பிடத்தக்கது. மேலும், IMF கடன்களால் ஒரு யுத்தத்தை வெல்ல முடியாது.

4. பொறுமைக்கும் கலாசாரக் கட்டுப்பாட்டிற்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லை ஏப்ரல் 22 அன்றே லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளால் சோதிக்கப்பட்டது. அந்த தாக்குதலால் அவர்கள் எந்தவொரு பலனையும் அடையவில்லை. ஒருவேளை இந்தியாவை பொதுவெளியில் அவமானப்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம். அவர்கள் மனதளவில் ஒரு காலாவதியான சிந்தனையில் சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது.

5. பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவால் எளிதில் எட்டக்கூடியதாக இருந்தது. பாகிஸ்தானின் சிறந்த பாதுகாக்கப்பட்ட தளம் எனப் போற்றப்படும் நூர் கான் விமானப்படை தளம், பாகிஸ்தான் ராணுவத்தின் இதயமான பிரபல ராவில்பிண்டி விமானப்படை தளம் என முக்கியமான பல இடங்கள் இந்தியாவால் தாக்கப்பட்டது.

6. வழக்கமாக இஸ்லாமிய நாடுகளின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் மதத்தை பயன்படுத்தும். ஆனால் இந்திய உலேமாக்கள் தங்கள் சொந்த அரசாங்கத்திற்கு தாங்களே ஒரு ஃபத்வாவை வழங்கியுள்ளதால் பாகிஸ்தானால் மதப் பரிமாணத்தை பயன்படுத்த இயலவில்லை. மேலும், இந்தியாவில் தான் இஸ்லாமியப் பள்ளியான தியோபந்த் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

7. ஒரு ஜனநாயக சமூகத்தில் ரகசியங்களை காப்பது மிகவும் கடினமானது, ஆனால் இந்தியாவிலிருந்து மிகக் குறைவாகவே தகவல்கள் வெளியே கசிந்தது. இதன் மூலம், இந்தியாவின் ஒழுக்கமும் ஒற்றுமையும் வெளிப்படுகிறது. பன்யான் உல் மர்சூஸின் பலன்கள் ஆபரேஷன் பன்யான் மர்சூஸைப் பற்றி மிகக்குறைந்த அளவிலான ஆதாரங்களே வெளிவந்துள்ளன. பெரிதாக விளம்பரப் படுத்தப்பட்ட அளவிற்கு அதன் செயல்பாடுகள் இல்லை என்பதே உண்மை. தற்காலிக போர் நிறுத்தம் பாகிஸ்தானைக் காப்பாற்றியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தலைமை தங்களது சாதனைகள் குறித்து பெரும் அறிக்கைகளை வெளியிட்டாலும், இந்தியாவில் சிறிய பாதிப்பு கூட இல்லை என்பதே நிதர்சனம். அதை உறுதிப்படுத்தும் விதமாக, இந்திய வானம்வழி திறந்தே இருந்தது, விமானங்கள் ரத்து செய்யப்படாமல் தடையின்றி பறந்தன. டெல்லியிலோ அமிர்தசரஸிலோ ஏவுகணைகள் விழுந்ததாக உறுதிப்படுத்தக்கூடிய எந்தக் காட்சிகளும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.