உதயநிதி அழைத்தால் தேர்தலில் அவருக்காக பிரச்சாரம் செய்வேன்: சந்தானம்!

உதயநிதி அழைத்தால் தேர்தலில் அவருக்காக பிரச்சாரம் செய்வேன் என கூறி இருக்கிறார் நடிகர் சந்தானம்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சந்தானம். குறிப்பாக விஜய் டிவியில் இருந்து வந்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர். சிம்பு நடித்த மன்மதன் படத்தில் அறிமுகமாகி அதற்குப் பிறகு நாயகர்களுக்கு இணையான கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர். காமெடியனாக ஏராளமான படங்களை நடித்துக் குவித்த அவர் தொடர்ந்து நாயகனாக அவதாரம் எடுத்த தில்லுக்கு துட்டு, இனிமே இப்படித்தான் உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில் தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். தில்லுக்குதுட்டு படம் கொடுத்த வெற்றி அவருக்கு உற்சாகத்தை தந்தது. அதை அடுத்து டிடி ரிட்டன்ஸ் படமும் வெளியான நிலையில் தற்போது சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்திருக்கிறார். படத்தின் டீசர், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழு ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் தயாரிப்பாளர் ஆர்யா, நடிகர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சந்தானம் கூறியதாவது:-

நாயகனாக நடித்த நான் ஹீரோவாக மாறிவிட்ட பிறகு ஆளே மாறிவிட்டதாக ஆர்யா சொன்னார். டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் பழைய சந்தானத்தை மீண்டும் கொண்டு வரும். இந்த படத்தில் யூடியூபர்கள் பற்றி தவறாக சொல்லவில்லை. அதே நேரத்தில் நல்லதையும் கெட்டதையும் கலந்து சொல்லி இருக்கிறோம். கோவிந்தா கோவிந்தா பாடலில் யார் மனதையும் புண்படுத்தவில்லை. நான் பெருமாள் பக்தர் என்பதால் அந்த பாடலை வைத்தேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்து தான் செல்வேன்.

போர் பதற்றம் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்க வேண்டி இருந்தால் நிச்சயம் தள்ளி வைத்து தான் ஆக வேண்டும். ஒரு புரொடியூசராக ஆர்யா எனக்கு நிறைய செய்திருக்கிறார். அதே நேரத்தில் அதிகமாக சண்டையும் வந்திருக்கிறது. அடிக்கடி ஈஷா செல்லும் என்னிடம் சத்குருவிடம் பணம் வாங்கி வா என ஆர்யா சொல்வார். நான் நிறைய படங்களில் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறேன். என்னை காமெடி வேடங்களில் மக்கள் பார்த்து விட்டதால் இனி மேலும் காமெடியனாக நடிக்க முடியாது. அப்படியே நடித்தால் ஒரு புது ஸ்டைல் கிடைக்க வேண்டும். சிம்பு படத்தில் மட்டும் மீண்டும் காமெடியனாக நடிக்க சிம்பு மட்டுமே காரணம். அவருக்காக தான் அந்த படத்தில் நடிக்கிறேன். அதே போல உதயநிதி ஸ்டாலினும் எனக்கு நல்ல நண்பர் தான். அவர் கூப்பிட்டால் சில விஷயங்கள் சரியாக அமைந்தால் தேர்தலில் அவருக்காக பிரச்சாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.